இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இதுவரை 10 ரன்கள் கூட தாண்டாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
ஏனெனில் 2024 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இந்த தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். சொல்லப்போனால் கடந்த டி20 உலகக் கோப்பைகளில் 3வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரராக உலகக் சாதனை படைத்துள்ள அவர் 2 தொடர்நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவாஸ்கர் ஆதரவு:
ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக துவக்க வீரராக அசத்தியதால் இம்முறை அவரை இந்திய அணி நிர்வாகம் ஓப்பனிங்கில் களமிறக்கியது. அந்த வாய்ப்பில் சவாலான பிட்ச்சில் தடுமாறும் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார். அதனால் அவரை மீண்டும் 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் விராட் கோலி தடுமாறுவதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது தடுமாறும் விராட் கோலி சூப்பர் 8, செமி ஃபைனல் போன்ற முக்கிய போட்டிகளில் அசத்துவார் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் விமர்சிக்காமல் ஆதரவு கொடுத்தாலே போதும் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“நாட்டுக்காக விளையாடும் எந்த வீரருக்கும் வெற்றி பெற வேண்டும் என்பதே மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். அதை நீண்ட காலமாக செய்து வரும் விராட் கோலி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் நாம் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கிறோம். இன்னும் சூப்பர் 8, செமி ஃபைனல், ஃபைனல் வரவுள்ளன. எனவே விராட் கோலி தற்போதைக்கு அமைதியாக இருந்து தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஆஹா நியூஸிலாந்து 90% நாக் அவுட்டானதால் இந்தியாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சூப்பர் 8, செமி ஃபைனல் வாய்ப்பு இதோ
“3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் நீங்கள் நல்ல பந்துகளை சந்திப்பீர்கள். மற்றொரு நாள் அதே பந்து ஒயிட் அல்லது பவுண்டரிக்கு செல்லும். எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் வருவார் என்று நம்புவோம்” எனக் கூறினார்.



