இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தவர். 1971ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஹெல்மெட் போடாமலேயே வெறித்தனமான வேகத்தில் பவுலிங் செய்யக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எதிர்கொண்ட பெருமைக்குரியவர். அந்த காலத்திலேயே உலகின் டாப் பவுலர்களை எதிர்கொண்ட அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.
1983 உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான அணியில் அங்கமாக இருந்த அவரது தலைமையில் இந்தியா 1985 உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்றது. அதனால் 1980களில் சச்சின் டெண்டுல்கர் போன்ற பலருக்கும் உத்வேகமாக இருந்த அவர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சுனில் கவாஸ்கருக்கு அவருடைய சொந்த ஊரில் மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.
சச்சின் போல கவாஸ்கர்:
மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் சரத் பவர் கிரிக்கெட் அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கே மும்பையில் பிறந்து மும்பைக்காக விளையாடி இந்திய கிரிக்கெட்டின் ஹீரோக்களில் ஒருவராக உருவெடுத்த கவாஸ்கருக்கு மும்பை வாரியம் முழு உருவச்சிலையை வைத்து கௌரவித்துள்ளது. 2023 ஐசிசி உலகக் கோப்பையின் போது அதே மைதானத்தில் சச்சினுக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டது.
தற்போது சச்சினை தொடர்ந்து இந்தியாவில் ஒரு மைதானத்தில் முழு உருவச்சிலை கொண்ட 2வது வீரர் என்ற பெருமையை கவாஸ்கர் பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற அதனுடைய திறப்பு விழாவில் கவாஸ்கர் மற்றும் மும்பை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் தன்னுடைய சிலையைத் திறந்து வைத்த கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு.
கவாஸ்கர் நெகிழ்ச்சி:
“கிரிக்கெட் வரலாற்றின் மாணவனாக என்னை நான் கருதுவதாக எப்போதும் சொல்வேன். எங்களுடைய காலங்களில் வீடியோக்கள், இணையம் கிடையாது. புத்தகங்கள் மற்றும் வார இதழ்கள் மட்டுமே இருந்தன. அதைப் பார்த்து சுய சரிதைகளைப் படித்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம். அதனாலேயே இந்த அருங்காட்சியகம் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது”
இதையும் படிங்க: 525 பந்துகள்.. டிராவிட்டை மிஞ்சிய பொறுமை.. ஆஸியில் ஹீரோ.. புஜாரா படைத்துள்ள சாதனை லிஸ்ட் இதோ
“மும்பை வாரியம் மும்பை மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான வேலை செய்துள்ளது. ஏனெனில் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து பார்க்கும் இளைஞர்கள் வரலாறு மற்றும் கதைகளைப் பார்த்து உத்வேகமடைவார்கள்” என்று கூறினார். அதே அருங்காட்சியத்திற்கு 1976 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய தம்முடைய ஜெர்சியை முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்கார் பரிசளித்தார். 2023 உலகக்கோப்பையில் பயன்படுத்திய தம்முடைய ஜெர்ஸி மற்றும் பேட் ஆகியவற்றை ரோஹித் சர்மாவும் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.



