இதெல்லாம் தேவையில்லாதது மிஸ்டர் ராணா.. அவங்க அப்படி செஞ்சா தாங்குவீங்களா.. இளம் வீரரை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஹைதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா போராடி 28 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 54, ஆண்ட்ரே ரசல் 64* ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 209 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு மயங் அகர்வால் 32, அபிஷேக் சர்மா 32, ராகுல் திரிபாதி 20, ஐடன் மார்க்ரம் 18, அப்துல் சமத் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரர் ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக 8 பவுண்டரியுடன் 63 (29) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் ஹைதராபாத் 204/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
அதன் காரணமாக த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் சிக்சர் கொடுத்த அவர் மனம் தளராமல் சபாஷ் அகமது மற்றும் க்ளாஸென் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கொல்கத்தாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

ஆனால் ஆரம்பத்தில் 32 ரன்கள் அடித்து நன்றாக விளையாடிய மயங் அகர்வால் விக்கெட்டை எடுத்த அவர் அதை கொண்டாடிய விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெறும் 22 வயதாகும் இளம் வீரரான அவர் இந்தியாவுக்காக விளையாடிய சீனியர் வீரரான மயங் அகர்வால் முகத்தின் முன்பாக கையில் முத்தமிட்டு அதை காற்றில் பறக்க விட்டு சற்று திமிர்த்தனமாக கொண்டாடியது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேட்ஸ்மேன்கள் இப்படி ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும் போது உங்களுக்கு முத்தமிட்டால் நன்றாக இருக்குமா? நீங்கள் தாங்குவீர்களா என்ற வகையில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் மயங் அகர்வால் பவுண்டரிகள் அடித்த போது அவரிடம் இது போன்ற எதையும் பார்க்க முடியவில்லை. இதை செய்யத் தேவையில்லை மிஸ்டர் ராணா. கிரிக்கெட்டில் இது ஒரு விக்கெட் மட்டுமே”

இதையும் படிங்க: 2 வருஷமா எல்லாரும் பிளான் பண்ணிட்டாங்க.. இன்ஸ்டாவை பாத்து ஃபார்முக்கு வந்தேன்.. ஆட்டநாயகன் ரசல் பேட்டி

“பேட்ஸ்மேன் ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும் போது உங்களிடம் இப்படி செய்யவில்லை. நாம் அனைவரும் இந்த தொலைக்காட்சி யுகத்தில் இருக்கிறோம் என்பதை அறிவோம். அதனால் நாம் சில விஷயங்களை செய்வதை பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள் இதை செய்யாமல் கிரிக்கெட் விளையாடலாம். விக்கெட்டை எடுத்தால் அதை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். உங்கள் அணியுடன் சேர்ந்து கொண்டாடுங்கள். ஆனால் எதிரணி வீரரிடம் இப்படி செய்யத் தேவையில்லை” என்று கூறினார்.

Advertisement