ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. முன்னதாக அந்த போட்டியில் ரோஹித் சர்மா இல்லாமல் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை பெஞ்சில் அமர வைத்த இந்திய அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்தது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அனுபவமற்ற நித்திஷ் ரெட்டியை தேர்ந்தெடுத்த இந்திய அணி வெற்றியும் கண்டது. ஆனால் அவருடைய தேர்வுக்கு முன்னாள் வீரர் சுனில் காவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
விமர்சித்த கவாஸ்கர்:
குறிப்பாக கௌதம் கம்பீர் தலைமையிலான புதிய இந்திய அணி நிர்வாகம் வித்தியாசமாக சிந்திப்பதாக கவாஸ்கர் கூறியிருந்தார். ஆனால் நித்திஷ் ரெட்டி ஆஸ்திரேலியாவில் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இருப்பவர் கிடையாது என்று அவர் கூறியிருந்தார். இருப்பினும் நித்திஸ் ரெட்டி முதல் இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கை கொடுத்தார்.
மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட் எடுத்த அவர் தன்னுடைய தேர்வை நியாயமாக்கும் வகையில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினர். அதன் காரணமாக தற்போது சுனில் கவாஸ்கர் அவரை பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் இரண்டு சதங்கள் அடிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது”
கவாஸ்கர் பாராட்டு:
“ஆனால் நித்திஷ் ரெட்டி மிகவும் இம்ப்ரஸான இன்னிங்ஸ் விளையாடினார். அவர் தேவையான சூழலில் அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டார். அது அவர் அறிமுகப் போட்டியில் விளையாடினார் என்பதை பொய்யாகியது. முதல் இன்னிங்ஸில் அவர் புத்துணர்ச்சியுடன் விளையாடி அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரராக வந்தார்”
இதையும் படிங்க: உண்மையை சொன்னதுக்கு ஹேசல்வுட்டை காயம்ன்னு இந்தியா மாதிரி ஆஸி கழற்றி விட்டாங்க.. கவாஸ்கர் அதிருப்தி
“அவருடைய பந்து வீச்சு தேவையான போது வந்தது. ஃபீல்டிங் அற்புதமாக அமைந்தது. அவர்தான் வருங்காலத்தில் அசத்த போகக்கூடிய நம்முடைய வீரர்” என்று கூறினார். இதை அடுத்து இந்திய அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த போட்டியிலும் வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல இந்திய அணி போராட உள்ளது.



