சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் விராட் கோலி உலகின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். 2008 ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 27000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற சராசரியில் பேட்டிங் செய்துள்ள அவர் 82 சதங்களையும் அடித்துள்ளார்.
அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை முந்தி வேகமாக 10000 ரன்கள் அடித்தது உட்பட விராட் கோலி நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார். அந்த வகையில் நிறைய சாதனைகளைப் படைத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.
சச்சின் – கோலி கம்பேரிசன்:
அதன் காரணமாக சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி சிறந்தவர் என்று இந்தக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலான ரசிகர்கள் வாதிடுவது வழக்கமாகும். இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் சிறப்பு வர்ணனையாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அவரிடம் சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனா? அப்படி என்றால் அது ஏன்? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் மட்டுமே இப்படி முன்னாள் இந்நாள் வீரர்களை ஒப்பிடும் வழக்கம் இருப்பதாக கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் சூழ்நிலைகள், மைதானங்கள், பிட்ச்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் வேறுபாடு உள்ளதாக கவாஸ்கர் கூறினார். அதனால் சச்சின் – கோலியை தாம் எப்போதும் ஒப்பிட மாட்டேன் என்று அவர் தெரிவித்து விட்டார்.
கவாஸ்கர் மறுப்பு:
இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் தலைமுறைகளை நான் ஒப்பிடுவதில்லை. ஏனெனில் விளையாடும் சூழ்நிலைகள், பிட்ச்கள், எதிரணிகள் வித்தியாசமானவை. எனவே வீரர்களை ஒப்பிடுவது மிகவும் கடினம். துணைக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் இது மட்டுமே நம்முடைய ஒரே பலவீனமாகவும் இருக்கிறது. நாம் எப்போதும் இப்படி வீரர்களை ஒப்பிடுகிறோம்”
இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தர் அடுத்த போட்டியில் கண்டிப்பா பிளெயிங் லெவனில் விளையாடனும் – காரணத்தை கூறிய முகமது கைப்
“எப்போதாவது யாராவது கிரேக் சேப்பலை விட ரிக்கி பாண்டிங் சிறந்த வீரர் என்று யாராவது கேட்டுப் பார்த்ததுண்டா? யாரும் இருக்க மாட்டார்கள். எனவே தற்போதுள்ள வீரர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். எந்த ஒப்பீடுகளும் வேண்டாம். ஆனால் துணைக் கண்டத்தில் நாம் அதை செய்கிறோம். நாம் அனைவரும் காலத்தைத் தாண்டி ஒப்பீடு செய்கிறோம்” என்று கூறினார்.



