இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்று வருகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் இந்தியாவின் பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். அப்படிப்பட்ட அவர்கள் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர்.
இருப்பினும் சமீபத்திய நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திக்க அவர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஓய்வு பெறுமாறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றினர்.
2027 உலகக் கோப்பை:
அதனால் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்களை தேர்வுக்குழு வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு கழற்றி விட முடிவெடுத்துள்ளது. அதற்கு முன்பாக ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா வழியில் விராட் கோலியும் விடை பெற்றுள்ளார். தற்போதைய நிலையில் அடுத்ததாக அவர்கள் 2027 உலகக் கோப்பையில் கடைசியாக இந்தியாவுக்காக ஜோடியாக விளையாடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பையிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவார்களா என்பது சந்தேகம் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே சமயம் தொடர்ச்சியாக பெரிய ரன்களையும் சதங்களையும் அடித்தால் அவர்களை கடவுளாலும் இந்திய அணியிலிருந்து நீக்க முடியாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கவாஸ்கர் கருத்து:
“ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் இருவரும் மிகச்சிறந்த வீரர்கள். ஆனால் தேர்வுக்குழு மீண்டும் 2027 உலகக் கோப்பையை முன்னோக்கி அணியை உருவாக்கப் பார்ப்பார்கள். அந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலியால் இருக்க முடியுமா? அதே பழைய பங்களிப்பை கொடுக்க முடியுமா? என்று பார்ப்பார்கள். அதை அவர்களால் செய்ய முடியும் என்று தேர்வுக் குழுவினர் கருதினால் கண்டிப்பாக அவர்கள் இருவரும் விளையாடுவார்கள்”
இதையும் படிங்க: அதை செய்ய முடியலன்னு நினைக்கிற நாளில்.. ஒன்டே கிரிக்கெட்டிலும் ஓய்வாகி போய்ருவேன்.. ரோஹித் உருக்கம்
“அதே சமயம் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவெனில் அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று நினைக்கவில்லை. இங்கே நான் உண்மையுடன் பேசுகிறேன். ஆனால் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். அடுத்த வருடம் சிறப்பாக விளையாடி அருமையான ஃபார்மை பெற்று தொடர்ந்து சதங்கள் மேல் சதங்களை அடித்தால் அவர்களை கடவுளாலும் நீக்க முடியாது” என்று கூறினார்.



