ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக அந்தத் தொடரின் 2வது போட்டியில் டிராவிஸ் ஹெட் – முகமது சிராஜ் ஆகியோர் மோதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக 140 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்த ஹெட்டை அவுட்டாக்கிய சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் கோபமாக அனுப்பினார். அதற்கு ஹெட்டும் சில வார்த்தைகளை பேசிக்கொண்டே கோபமாக சென்றார். பின்னர் தங்களுடைய உள்ளூர் வீரரை அப்படி அனுப்பியதற்காக அடிலெய்ட் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிராஜுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
வில்லனாக சிராஜ்:
இருப்பினும் அதே போட்டியில் பேட்டிங் செய்த சிராஜ் அருகில் நின்ற ஹெட்டிடம் தாமாக சென்று சில சமாதான வார்த்தைகளை பேசினார். இறுதியில் போட்டியின் முடிவில் அவர்கள் இருவரும் ஜென்டில்மேன்களாக கை கொடுத்துக்கொண்டு புன்னகையுடன் வெளியேறினார்கள். அந்த நிகழ்வுக்காக ஐசிசி இருவருக்கும் தலா 20% சம்பளம் அபராதமாக போட்டது. அத்துடன் அந்த சர்ச்சை நிறைவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆனால் 2013 – 14 ஆஷஸ் தொடரில் ஆஸ்டன் அகர் வீசியதில் எட்ஜ் கொடுத்தும் ஸ்டுவர்ட் ப்ராட் நடுவர் அவுட் கொடுக்காததால் நேர்மையுடன் வெளியேறவில்லை. அதனால் ஓய்வு பெறும் வரை இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரை வில்லனாகவே பாவித்து கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதே போன்ற நிலையில் தற்போது சிராஜ் இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கவாஸ்கர் அட்வைஸ்:
எனவே அடுத்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இந்திய அணியினர் சிராஜூக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “சிராஜ் இனிமேல் ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் கொஞ்சம் சவாலை சந்திக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலியர்கள் யாரையாவது வில்லனாக அடையாளம் கொண்ட அவர் அவர்களுக்குள் சிக்கிக் கொள்வார்கள்”
இதையும் படிங்க: இதான் விராட் கோலி ரூட்.. ஆஸியை பாத்து பயப்படாம நெருப்புடன் மோதுங்க.. இந்தியாவுக்கு சாஸ்திரி அட்வைஸ்
“இங்கிலாந்தைப் பொறுத்த வரை ஸ்டுவர்ட் ப்ராட் எட்ஜ் கொடுத்தும் நடந்து செல்லாததால் அவருக்கு எதிராக கூச்சலிடுமாறு ஆஸ்திரேலிய ஊடகங்களே தங்களது ரசிகர்களுக்கு முதல் பக்க கட்டுரைகள் வரைந்தன. அதே போல தற்போது சிராஜ் ஆஸ்திரேலியா ரசிகர்களின் வில்லனாக உள்ளார். அதை அவர் எதிர்கொண்டாக வேண்டும். எனவே இந்திய அணியினர் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் நீங்கள் களத்திற்கு சென்று சிறப்பாக விளையாடுங்கள் என்று அவரிடம் சொல்வது முக்கியம்” எனக் கூறினார்.



