தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ளது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாதாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயம் கொல்கத்தா பிட்ச்சில் பேய்கள் எதுவுமில்லை என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
எனவே இந்திய அணி சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளாததே தோல்விக்கு காரணமானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் இந்திய அணி சந்தித்த தோல்விக்கு மோசமான பிட்ச் மட்டும் காரணமில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மாறாக சவாலான பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் ஈகோவை விட்டுவிட்டு பொறுமையுடன் விளையாடாதே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
ஈகோவை விடுங்க:
அத்துடன் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆல் ரவுண்டர்கள் மேல் காட்டும் அதிகப்படியான ஆசையும் தோல்விக்கு காரணமாவதாக கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிடைத்த தோல்வி உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேன்களை பார்ப்பதற்கான கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன்”
“ஏனெனில் உள்ளூரில் பெரிய ரன்கள் குவிப்பவர்கள் இது போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச்சுகளில் விளையாடப் பழகியிருப்பார்கள். சர்வதேச வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதில் மிகவும் மும்மரமாக இருப்பதால், உள்ளூர் மைதானங்களில் போதுமான பயிற்சிகள் எடுப்பதில்லை. அதனாலேயே அவர்கள் இப்படி தடுமாறுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் உங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு பொறுமையாக விளையாடுமாறு கேட்கும்”
ஆல் ரவுண்டர்கள் ஆசை:
“டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் பந்துகளை அடிக்க முடியாமல் தவற விடும் போது உடனடியாக சிக்ஸர் அடித்து யார் பாஸ் என்பதைக் காட்ட முயற்சிக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சூழ்நிலைமைகளை ஏற்றுக்கொண்டு பணிவாக விளையாடுவரே உண்மையான பாஸ். அங்கே நீங்கள் ரன்கள் அடிக்கக்கூடிய பந்துகள் வரும் வரை காத்திருக்க வேண்டும்”
“அதே போல சிவப்பு மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருக்கும் ஆல் ரவுண்டர்களுக்கு இடையேயான வித்தியாசத்தையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். ஒழுக்கமான டெஸ்ட் ஆல் ரவுண்டர் என்பவர் பேட்ஸ்மேன் அல்லது பவுலராக மட்டுமே பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். ஒரு சில ஓவர்கள் வீசுபவர்கள் அல்லது ரன்கள் அடிப்பவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவைப்பட மாட்டார்கள்”
இதையும் படிங்க: திறமையான சுந்தரை இப்படி வீணடிக்காதீங்க.. இந்தியாவில் 4 பேர் தேவையில்லை.. கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்
“முறையான பேட்ஸ்மேன் விக்கெட்டுகள் எடுப்பது நல்லது. முழு நேர பவுலர் கணிசமான ரன்கள் எடுப்பது நல்லது. ஆனால் 2வது வேலையை வைத்து வீரர்களை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு மதிப்பை கொடுக்காது. தென்னாப்பிரிக்க தொடருக்கு பின் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடப் போவதில்லை. அதனாலேயே சிவப்பு, வெள்ளைப்பந்து ஆட்டத்திற்கு இடையேயான வித்தியாசத்தை உணர்வது அவசியமாகிறது. இல்லையென்றால் இந்தியா 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை மீண்டும் தவற விடலாம்” என்று கூறினார்.



