gavவென்றது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. 2005, 2017 ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான ஆடவர் அணி வென்றது போல தற்போது மகளிர் அணி வென்றுள்ளதாக பல ஒப்பீடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் தம்மைப் பொறுத்த வரை இந்திய கிரிக்கெட்டில் 1983 உலகக் கோப்பை வெற்றிக்கு வேறு எந்த வெற்றியும் ஈடாகாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் கிரிக்கெட்டைப் பற்றிய அடிப்படைகள் அதிகம் தெரியாத 1983இல் இந்தியா கோப்பை வென்றதாக அவர் கூறியுள்ளார்.
1983க்கு ஈடாகாது:
அதே சமயம் தற்போதைய வெற்றி இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கும் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றி தேவைப்பட்டால் விளையாட்டு நுண்ணறிவு திறன் பல்கலைக்கழகங்களில் இருந்து ஆடம்பரமான பட்டங்களை அல்ல, கோப்பைகளை வெல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது”
“மேலும் அது தங்கள் நாட்டு கிரிக்கெட்டர்களின் திறமை, பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்த இந்திய பயிற்சியாளர்களால் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதையும் நிரூபித்தது. தற்போது சிலர் இந்த வெற்றியை 1983 உலகக் கோப்பையை வென்ற ஆடவர் அணியுடன் ஒப்பிடுகிறார்கள். அதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் ஆடவர் அணி லீக் சுற்றைத் தாண்டவில்லை”
புதிய மறுமலர்ச்சி:
“எனவே ஒவ்வொரு போட்டியும் அவர்களுக்கு நாக் அவுட் போல புதிதாக இருந்தது. மறுபுறம் மகளிரணி இந்த வெற்றிக்கு முன்பே 2 முறை இறுதிப்போட்டிக்கு சென்று நல்ல ரெக்கார்டை வைத்துள்ளது. 1983 வெற்றி இந்திய கிரிக்கெட்டை உற்சாகப்படுத்தி உலகம் முழுவதும் ஒரு குரலை ஒலித்தது. அதே போல இந்த வெற்றி பல வருடங்களுக்கு முன்பே மகளிர் கிரிக்கெட்டை துவங்கிய நாடுகளுக்கு இந்தியாவின் ஆதிக்கம் துவங்கி விட்டது என்பதை தெரிவிக்கிறது”
இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தரிடம் அந்த திறமை இருக்கு.. அவரை அக்சர் படேலுக்கு முன்னாடி இறக்குங்க – ஜேசன் கில்லெஸ்பி கருத்து
“1983 வெற்றி பெற்றோர்களுக்கு தங்களுடைய குழந்தைகளை கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தது. அதே போல இந்த வெற்றி இந்தியாவின் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களை மகளிர் கிரிக்கெட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறகுகளைக் கொடுக்கும். மகளிர் ஐபிஎல் ஏற்கனவே அதற்கான செயல்முறைகளைத் துவங்கியுள்ளது. தற்போது பெற்றோர்கள் தங்களுடைய மகளின் வருங்காலமாக விளையாட்டு துறையும் இருக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கத் துவங்கியுள்ளனர்” எனக் கூறினார்.



