ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை பெங்களூரு அணி முதல் முறையாக வென்ற சாதனை படைத்தது. மறுபுறம் இறுதிப் போட்டியில் வெறும் ஒரு சிக்சர் வித்தியாசத்தில் தோற்ற பஞ்சாப் முதல் கோப்பையை கோட்டை விட்டது. இருப்பினும் 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பாக வழி நடத்தி 11 வருடம் கழித்து பஞ்சாப்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்து ஃபைனல் வரை அழைத்து சென்றார்.
மேலும் பேட்டிங்கில் 604 ரன்களை குவித்து அசத்திய அவர் 2022 சீசனில் டெல்லியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். கடந்த வருடம் கொல்கத்தாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்தார்.
கேப்டனாக வேண்டாம்:
அப்படி மிகச்சிறப்பாக செயல்படுவதால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லுக்கு பதிலாக அவரை நியமித்திருக்கலாம் என்று சில ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் கேப்டனாக வந்தால் அதைத் தாம் தற்போதைய நிலையில் ஏற்க மாட்டேன் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருக்கிறாரா இல்லையா என்பதைப் பார்ப்பது முக்கியமல்ல. முதலில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் மேலே கவனத்தை செலுத்த வேண்டும். அவருக்கு நாம் வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது அவருக்கு தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கும்”
கவாஸ்கர் கருத்து:
“இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் சுப்மன் கில் மேலே எந்த அழுத்தமும் இருக்கக்கூடாது. சொல்லப்போனால் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிலேயே இல்லை. எனவே அவர் கேப்டனாக செயல்படுவதைப் பற்றி பேசுவதற்கான இடமே இல்லை. அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் போது அதைப்பற்றி நாம் பேசுவோம்”
இதையும் படிங்க: இது டி20 இல்ல.. கஷ்டமான டெஸ்டில் சுப்மன் கில் முதல்ல அதுல உழைச்சு முன்னேறனும்.. பாண்டிங் அட்வைஸ்
“இப்போது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் மீது முழுமையான தன்னம்பிக்கையைக் காட்டுங்கள் அவர் மீது சந்தேகத்தை உண்டாக்கி அழுத்தத்தை ஏற்படுத்தாதீர்கள். ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார் என்று சொல்லி அவர் மேலே தேவையற்ற அழுத்தத்தை உருவாக்காதீர்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.



