ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் அதுவும் தென்னாப்பிரிக்க மண்ணில் சதத்தை அடித்த அவர் கடந்த ஐந்து டி20 போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.
அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ரிசப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன் சிறப்பாக விளையாடியதில்லை.
சாம்சனுக்கு இடமில்லை:
அப்படியிருந்தும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது சில ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ரசிகர்களிடம் பெரிய ஆதரவு மற்றும் அனுபவம் இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் ரிசப் பண்ட் அவரை விட சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் கேம் சேஞ்சர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
அதனாலேயே சாம்பியன்ஸ் டிராபி அணியில் சாம்சனை அவர் முந்தியுள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்காதது மிகவும் கடினமானது. அவரை தேர்ந்தெடுக்காததற்கு எந்த சாக்கும் இல்லை. ஆனால் அவர் ரிஷப் பண்ட்டுக்கு எதிராக போட்டியிட்டார்”
கேம் சேஞ்சர்:
“எப்போதும் கேம் சேஞ்சரான அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதுடன் சிறந்த விக்கெட் கீப்பர். அதே சமயம் சாம்சனை விட அவர் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் சாம்சனை விட ரிஷப் பண்ட் போட்டிகளை அதிகமாக மாற்றும் தன்மை கொண்டவர். அதனாலேயே சாம்சன் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதற்காக சாம்சன் சோகமாக உணர வேண்டிய அவசியம் இல்லை”
இதையும் படிங்க: கெளதம் கம்பீருடன் சண்டையா? எல்லாத்தையும் நான் சொல்வதை இங்க சொல்ல முடியாது.. ரோஹித் பேட்டி
“ஏனெனில் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து ரசிகர்களும் அவருக்கு அனுதாபத்தை கொண்டுள்ளனர். மேலும் அவர் சாதித்துள்ள விஷயங்களுக்காக ரசிகர்கள் எப்போதும் பாராட்டுவார்கள்” என்று கூறினார். இருப்பினும் அடுத்த நடைபெறும் இங்கிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக முழுமையாக விளையாடும் வாய்ப்பை பெற உள்ளார். அந்த வகையில் எந்த விமர்சனமும் செய்யாமல் தொடர்ந்து அவர் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



