ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளை உடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்ற இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது. அதனால் மொத்த இந்திய ரசிகர்களும் வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர்.
இந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் முக்கிய பங்காற்றியதால் தொடர்நாயகன் விருதை வென்றார். சொல்லப்போனால் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்த அவர் தான் இந்த உலகக் கோப்பை வென்று கொடுத்ததாக விராட் கோலி பாராட்டினார். அதே போல தொடர் முழுவதும் தடுமாறினாலும் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
கவாஸ்கர் பாராட்டு:
அத்துடன் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா இத்தொடரில் ஆல் ரவுண்டராக வெற்றியில் முக்கிய பங்காற்றி விமர்சித்த ரசிகர்களை பாராட்ட வைத்தார். இது போக அக்சர் படேல் உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள். இந்நிலையில் இந்தியாவின் இந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றினாலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்கு உயர்ந்து நின்றதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
அதற்கான காரணம் பற்றி இந்தியா டுடேவில் அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றிக்கு பலரும் பங்காற்றினர். இந்த அணி என்ன செய்தது என்று நீங்கள் பார்த்தால் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் சாம்பியன்கள். எடுத்துக்காட்டாக தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் இந்த விருதுக்கு முழுமையாக தகுதியானவர். இருப்பினும் ரோகித் சர்மா இந்த தொடரை நடத்திய முக்கிய மனிதர்”
“எனவே அவருடைய கேப்டன்ஷிப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் பதற்றமான சூழ்நிலைகளிலும் அவருடைய பாடி லாங்குவேஜ் ஒரு முறை கூட குறையவில்லை. ஆம் சில நேரங்களில் அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நாம் பார்த்து பழகி விட்டோம். ஆனால் அது பரவாயில்லை”
இதையும் படிங்க: தோனி மாதிரி விராட், ரோஹித்துக்கும் இந்த கெளரவத்தை கொடுங்க.. பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை
“இருப்பினும் இந்திய அணிக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலைகளில் அவர் அணியை நடத்தியது உயர்ந்த பாராட்டுக்கு உரியது. அதனால் தான் அவருடைய கேப்டன்ஷிப் இந்த தொடரில் இந்தியாவுக்கு உயர்ந்து நின்ற செயல்பாடாக எனக்குத் தெரிகிறது” என்று கூறினார். அந்த வகையில் தனது கடைசி வாய்ப்பில் கேப்டனாக உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.



