
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கியது.
அந்த போட்டியில் இந்தியாவுக்காக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவ் மீண்டும் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மிகவும் சுமாராக பவுலிங் செய்து தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். எனவே கடைசிக்கட்ட நாட்களில் சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பர்மிங்கம் மைதானத்தில் விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும் கடந்தப் போட்டியில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காதது தோல்விக்குக் காரணமானது. எனவே பேட்டிங் வரிசையை ஆழப்படுத்துவதற்காக அவரை தேர்ந்தெடுக்காமல் வாசிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்ததாக கேப்டன் சுப்மன் கில் விளக்கமளித்தார். இந்நிலையில் கடந்த போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 830 ரன்கள் அடித்த இந்தியா பேட்டிங் துறையில் வலுவாகவே இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதல் 6 பேட்ஸ்மேன்கள் அடிக்காத ரன்களை லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடிக்கப் போகிறார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வளவு ரன்கள் அடித்தாலும் குல்தீப் போன்றவர் விக்கெட் எடுக்காவிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்றும் கவாஸ்கர் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “குல்தீப் தேர்வு செய்யப்படவில்லை என்பதில் நான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறேன்”
“ஏனென்றால் பர்மிங்கம் போன்ற ஆடுகளம் கொஞ்சம் சுழலுக்கு இருக்கிறது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஒருவேளை உங்களுடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நீங்கள் எதிர்பார்க்கும் ரன்களை அடிக்காவிட்டால் அதை 7, 8வது நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வந்து சரி செய்யப் போவதில்லை”
இதையும் படிங்க: இதுக்கு மேல பும்ராவுக்கு ரெஸ்ட் வேணுமா? இந்தியாவை விட அது முக்கியமா? கம்பீர், கில்லை விளாசிய சாஸ்திரி
“ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் உங்களுடைய பேட்ஸ்மேன்கள் யாரும் மோசமாக விளையாடவில்லை. 2 இன்னிங்சிலும் சேர்த்து நீங்கள் 830 ரன்கள் அடித்தீர்கள். வெறும் 380 ரன்கள் அடிக்கவில்லை. நீங்கள் அடித்த ரன்கள் மிகவும் அதிகமானது. எனவே உங்களுடைய விக்கெட் எடுக்கும் துறையைத் தான் நீங்கள் வலுப்படுத்த வேண்டுமே தவிர பேட்டிங் துறையை அல்ல” என்று சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.