
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் போன்ற சீனியர்கள் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. அதன் காரணமாக சுப்மன் கில் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு பேட்டிங் துறையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.
ஏனெனில் 2014 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அவர் 2018, 2021 வருடங்களில் இங்கிலாந்து மண்ணில் விளையாடி சதங்களை அடித்துள்ளார். எனவே தற்போதைய பேட்டிங் துறையில் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் இளம் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு பெரிய ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்ற வேண்டிய நிலையில் உள்ளார்.
அந்த சூழ்நிலையில் லீட்ஸ் நகரில் நடைபெறும் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸை சிறப்பாகத் துவங்கிய ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்ஸிலும் நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ள அவர் 47* ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய திறமை என்னவென்று ராகுலுக்கே தெரியவில்லை என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நல்ல திறமை, பெரிய அனுபவத்தைக் கொண்டிருந்தும் 34 என்ற சுமாரான சராசரியைக் கொண்டுள்ள ராகுல் இத்தொடரில் 500 – 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தம்முடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் முழுமையான அணி வீரர். இதற்கு முன் விக்கெட் கீப்பராக செயல்படுவீர்களா? என்று கேட்ட போது அதை அவர் அணிக்காக செய்தார்”
“அதையே அணியும் விரும்புகிறது. அவரைப் பற்றி அவரிடம் ஒரு நிதானம் இருக்கிறது என்பது அரிதானது. ஏனெனில் இன்றைய காலகட்டங்களில் ஒவ்வொருவரும் தாங்கள் சாதித்ததைக் காட்டுவதற்காக கொண்டாடுகிறார்கள். ஆனால் ராகுல் கொண்டாட்டம் அமைதியானது. ராகுல் பற்றி அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பது அவருக்குத் தெரியாது”
இதையும் படிங்க: இது இப்படியே அமைஞ்சா இங்கிலாந்தில் 3 போட்டிக்கு மேலே விளையாடுவேன்.. ஹிண்ட் கொடுத்த பும்ரா
“இதை அவரும் அவரும் ஒப்புக் கொள்வார். நிறைய திறமையைக் கொண்டுள்ள அவர் அதற்குத் தகுந்தார் போல் செயல்படவில்லை. அதனால் தற்போது பெங்களூருவைச் சேர்ந்த நாம் நமது திறமையை முழுமையாக பயன்படுத்தினோமா? என்ற சுய சந்தேகம் அவருக்குள் இருக்கும். 3வது நாளில் அற்புதமாக விளையாடிய அவருடைய கவர் ட்ரைவ் என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் அதில் முழுமை இருந்தது. இத்தொடரில் அவர் 500 – 700 ரன்களை அடிப்பார் என்று நம்புகிறேன். அது இந்திய அணிக்கு அருமையாக இருக்கும்” என்று கூறினார்.