இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்திய அணி பகிர்ந்து கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தத் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியை பெற்றது. முன்னதாக இத்தொடருக்கு முன் பட்டோடி கோப்பைக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்தது.
அதற்கு பதிலாக ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்து வாரியம் அறிமுகப்படுத்தியது. மேலும் சச்சின் கோரிக்கையை ஏற்று கோப்பையை வெல்லும் அணியின் கேப்டனுக்கு பட்டோடி மெடல் வழங்கப்படும் என்று இங்கிலாந்து வாரியம் அறிவித்தது. ஆனால் தொடரின் முடிவில் வெற்றிக் கோப்பையை பரிசாக கொடுப்பதற்கு சச்சின் – ஆண்டர்சன் ஆகியோரில் யாருமே வரவில்லை.
அவமதித்ததா இங்கிலாந்து:
இந்நிலையில் கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பரிசாக கொடுக்க தம்மை அழைக்காமல் ஆஸ்திரேலிய வாரியம் அவமதித்தது போல தற்போது இங்கிலாந்து வாரியம் ஆண்டர்சன் – டெண்டுல்கரை அழைக்காமல் அவமதித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். மேலும் தொடர் சமநிலையில் முடிந்ததால் பட்டோடி மெடல் யாருக்குமே பரிசாக வழங்கப்படாதது குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.
“சச்சின், ஆண்டர்சன் ஆகிய 2 ஜாம்பவான்கள் பெயர்கள் தொடருக்கு பெயரிடப்பட்டது இதுவே முதல் முறையாகும். இறுதியில் தொடர் சமனில் முடிந்தாலும் கோப்பையை பரிசளிக்க அவர்களில் குறைந்தது யாராவது ஒருவர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பது வழக்கமாகும். இத்தனைக்கும் அவர்கள் இருவருமே 5வது போட்டியின் போது இங்கிலாந்தில் தான் இருந்தார்கள்”
கவாஸ்கர் விமர்சனம்:
“ஆனாலும் அவர்கள் வரவில்லை. அதற்கான காரணம் அவர்கள் அழைக்கப்படவில்லையா? அல்லது ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றதால் ஆலன் பார்டர் மட்டுமே பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பரிசாக கொடுப்பதற்கு அழைக்கப்பட்டது போல் ஏதேனும் நடந்ததா? தொடர் டிராவில் முடிந்ததால் கோப்பையை வழங்க அவர்கள் இருவருமே அழைக்கப்படவில்லையா?”
இதையும் படிங்க: 6 வாரங்கள் விளையாடிய கில்.. ரெஸ்ட் எடுக்காம அந்த தொடரில் விளையாடுவது பாராட்டுகுரியது.. கவாஸ்கர் பேட்டி
“கிரிக்கெட்டை வைத்து வருமானம் பார்க்கும் நிர்வாகிகளுக்கு அதனுடைய வரலாறு பற்றி தெரிவதில்லை. அதனாலேயே கோப்பை வழங்கும் நிகழ்வில் பட்டோடி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. தொடர் சமநிலையில் முடிந்ததால் பட்டோடி மெடல் எந்த கேப்டனுக்கும் வழங்கப்படவில்லையா? சில நேரங்களில் கேப்டன் சிறப்பாக செயல்படாமல் போகும் பட்சத்தில் யாருக்கு அந்த மெடலை கொடுப்பது? அது போன்ற சூழ்நிலையில் தொடர்நாயகனுக்கு அந்த மெடலைக் கொடுப்பது சரியானதாக இருக்கலாம்” என்று கூறினார்.



