இந்திய திருநாட்டில் மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களும் மக்களும் எப்போதுமே உச்சகட்ட வரவேற்பு ஆதரவு கொடுப்பது வழக்கமாகும். குறிப்பாக இந்திய அணி வெற்றி பெறும் போது ரசிகர்கள் அதை வெறித்தனமாக கொண்டாடி ஆதரவு கொடுப்பார்கள். அதே சமயம் தோல்வியை சந்தித்தால் சச்சினாக இருந்தாலும் அவர்கள் வீட்டின் மீது கற்களை ஏறிவதற்கு கூட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தயங்க மாட்டார்கள்.
அதனால் இந்திய ரசிகர்கள் பெரும்பாலும் தங்களுடைய அணிக்கு மட்டுமே ஆதரவு கொடுப்பார்கள் என்பது வெளிநாட்டவர்களின் கண்ணோட்டமாகும். அந்த சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பை ஃபைனல் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. 1,20,000 பேர் அமரக்கூடிய அந்த மைதானத்தில் இந்திய அணிக்கு குறைந்தது ஒரு லட்சம் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய ரசிகர்கள்:
அப்போது இந்தியாவை தோற்கடித்து அகமதாபாத் மைதானத்தில் உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் சவால் விடுத்து செய்தும் காட்டினார். இந்நிலையில் எந்த ஒரு விளையாட்டிலும் தங்களது அணிக்கு அந்தந்த நாட்டு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது இயற்கை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய ரசிகர்களைப் பற்றி மட்டும் வெளிநாட்டவர்கள் ஏளனமாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
அது போன்றவர்கள் தங்களுடைய அணிக்கு தங்கள் நாட்டு ரசிகர்கள் வெளிநாட்டுக்கு வந்து ஆதரவு கொடுக்காதது ஏன்? என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “50 வருடங்களுக்கு மேலான என்னுடைய அனுபவத்தால் இதை சொல்ல முடியும். தங்கள் அணி சிறப்பாக செயல்படாத போது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு நாட்டு ரசிகர்களும் அமைதியாகவே இருப்பார்கள்”
கவாஸ்கர் பதிலடி:
“வெளிநாட்டில் இந்தியா சிறப்பாக விளையாடும் போது சத்தம் வந்தால் அதற்கு இந்திய ரசிகர்கள் நீண்ட தூரம் பயணித்து, தங்களுடைய அணிக்கு ஆதரவு கொடுப்பதே முக்கிய காரணமாகும். உள்ளூர் மக்கள் மட்டுமல்ல. எனவே அடுத்த முறை சில வெளிநாட்டு வர்ணனையாளர் அல்லது ஊடகவியலாளர்கள் இந்தியா சரியாக செயல்படாத போது இந்திய ரசிகர்களின் மௌனத்தை பற்றி பேச முயலும் போது அவர்களின் ஆதரவாளர்கள் ஏன் அவர்கள் அணியை உற்சாகப்படுத்த வரவில்லை என்று கேட்க வேண்டும்”
இதையும் படிங்க: நைட் 2.30 மணிக்கு எழுப்பி அவரை அவுட்டாக்க பிளான் கொடுத்த.. ரோஹித் கேப்டன் இல்ல லீடர்.. பியூஸ் சாவ்லா
“இந்தியாவை தாக்கும் இந்த வணிகத்தை ஆக்கிரமிப்புடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் அது மட்டுமே அவர்களுக்கு புரியக்கூடிய ஒரே மொழியாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதெல்லாம் இந்தியா உலகின் எந்த நாட்டில் விளையாடினாலும் அங்கு இந்திய ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.