இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வியைத் தழுவியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் கில், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர் அதனால் 77/4 என தடுமாறிய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அவருடன் நிதிஷ் ரெட்டி 53, ஹர்ஷித் ராணா 52 ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்கள்.
இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு:
மறுபுறம் முழுமூச்சுடன் போராடிய விராட் கோலி சதத்தை அடித்து 124 ரன்களை குவித்தும் ஜடேஜா உள்ளிட்ட மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறியதால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தார் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்தூரில் விராட் கோலி வெளிப்படுத்தி ஆட்டத்தைப் பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ளலாம் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இக்கட்டான நேரத்தில் சிக்ஸர் அடிப்பேன் என்று அடம் பிடிக்காத விராட் கோலி சூழ்நிலையை மதித்து விளையாடியதாக அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவெனில் அவர் பிம்பத்திற்கு கட்டப்பட்டவர் அல்ல. நிறைய பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் தாங்கள் எப்படி உணரப்படுகிறோம் என்பதற்கேற்ப விளையாட நினைக்கிறார்கள். ஆனால் விராட் அப்படி இல்லை. தனது கையிலிருக்கும் வேலையில் அவர் பிணைக்கப்பட்டுள்ளார்”
கவாஸ்கர் பாராட்டு:
“அணிக்கு ரன்கள் அடிப்பதே அந்த வேலையாகும். சில நேரங்களில் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் அவர் சில சமயங்களில் அதிரடியைக் காட்டுகிறார். மைதானம் முழுவதும் விளையாடி சிங்கிள் டபுள் எடுக்கும் அவர் எதிர்பார்ப்புகளால் ஆளப்படுவதில்லை. நான் எதிர்பார்ப்புக்காக சிக்சர் அடிப்பேன் என்று நினைக்காமல் சூழ்நிலைக்காக விளையாடுவேன் என்ற அவருடைய மனநிலையே முக்கியம்.
“வெற்றியை விடுவதற்கு விரும்பாத அவர் கடைசி வரை முயற்சித்தார். கையுறைகள் வியர்த்து பிடி சற்று தளர்ந்ததாலேயே அவருடைய பேட் திரும்பி கேட்ச்சாகி அவுட்டானார். ஆனால் அவரிடம் வெற்றிக்கான நோக்கம் எப்போதும் இருந்தது. அதுவே இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாடம். நீங்கள் பிம்பத்திற்கேற்ப விளையாடாமல் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடுங்கள்”
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் கரியர்.. இந்தூர் போட்டி தான் கடைசி ஆட்டமா? – விவரம் இதோ
“அதற்காக நீங்கள் எப்போதும் நினைத்ததை விட நிலையாக விளையாட வேண்டும்” என்று கூறினார். அத்துடன் லோயர் ஆர்டரில் அசத்திய ராணா ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடுவதற்கு நிகரான வாய்ப்பை விராட் கோலியுடன் விளையாடியதால் பெற்றதாக கவாஸ்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



