ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. அதில் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் இந்தியா தங்களுடைய பயிற்சிப் போட்டியில் வங்கதேச அணியை தோற்கடித்தது. இருப்பினும் அந்தப் போட்டியில் விராட் கோலி ஓய்வெடுத்ததன் காரணமாக விளையாடாதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முன்னதாக கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் ஸ்டைலை கொண்ட அவரை இந்த தொடரில் தேர்வு செய்யக்கூடாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டது. இருப்பினும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 தொடர்நாயகன் விருதுகளை வென்றது உட்பட ஏராளமான அனுபவத்தை கொண்டிருப்பதால் மீண்டும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் 741 ரன்கள் அடித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
கவாஸ்கர் கருத்து:
எனவே ரோகித் சர்மாவுடன் விராட் கோலியை ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்று சௌரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் ஓப்பனிங்கில் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதே சிறந்த தேர்வாகும் என்பதால் ரோஹித் – ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி உலகக் கோப்பையிலும் துவக்க வீரராக விளையாடுவதற்கு தகுதியானவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இம்முறை ரோஹித் சர்மா – விராட் கோலி துவக்க வீரர்களாக இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதியில் சிறப்பாக விளையாடிய விதத்தை வைத்து ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்குவதற்கு தகுதியானவர். என்ன சொன்னாலும் நல்ல வீரர்கள் நல்ல வீரர்களே”
“அவர்கள் இடது அல்லது வலது கை வீரர்களாக இருந்தாலும் எங்கே வேண்டுமானாலும் பேட்டிங் செய்யக் கூடியவர்கள். எனவே இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் தான் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தொலைக்காட்சியில் அது போன்ற இடது – கை பேட்ஸ்மேன்கள் பற்றிய கலவையை பேசுவதற்கு நன்றாக இருக்கும். ரோகித் மற்றும் விராட் ஆகியோரால் உங்களுக்கு 2 அற்புதமான பேட்ஸ்மேன்கள் கிடைக்கின்றனர்”
இதையும் படிங்க: பேட்டிங்கை மட்டும் பாக்காதீங்க.. அவர் தான் டி20 உலகக் கோப்பைக்கு சரியான கீப்பர்.. கவாஸ்கர் தேர்வு
“குறிப்பாக தற்போதுள்ள ஃபார்முக்கு விராட் கோலி பேட்டிங் செய்வதற்காக சில ஓவர்கள் அல்லது 5 பந்துகள் கூட காத்திருக்க வேண்டியதில்லை. பொதுவாக நீங்கள் நேராக களத்திற்கு வந்து விளையாடுவது வித்தியாசமான உணர்வை கொடுக்கும். குறிப்பாக தனியாக நடந்து வருவதற்கும் பார்ட்னருடன் களமிறங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நாம் சேர்ந்து விளையாடுவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டு களமிறங்குவார்கள்” எனக் கூறினார்.