
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 518/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 175 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்கள் குவித்த நிலையில் கேப்டன் சுப்மன் கில் சதத்தை அடித்து 129* ரன்கள் குவித்தார். கூடவே நித்திஷ் ரெட்டி 43, துருவ் ஜுரேல் 44 ரன்கள் எடுத்து கைகொடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக அப்போட்டியில் முதல் நாளிலேயே அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 173 ரன்கள் அடித்தார்.
அதனால் இரட்டை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 2வது நாளில் மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். அதனால் தம்முடைய 3வது இரட்டை சதத்தை நழுவ விட்ட ஜெய்ஸ்வால் ஏமாற்றத்துடன் சென்றார். அது பற்றி நாளின் முடிவில் கேட்டதற்கு விளையாட்டில் அதுவும் ஒரு அங்கம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இரட்டை சதம் தவறியது பற்றி கவலைப்படாதீர்கள் என்று அவருக்கு ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதே சமயம் சதமடித்ததும் ஓய்ந்து விடாமல் அதை டாடி சதங்களாக (150+ ரன்கள்) மாற்றுவது முக்கியம் என்றும் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே 5 டாட் சதங்கள் அடித்துள்ள ஜெய்ஸ்வால் அதை தொடர வேண்டும் என்றும் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி ஜெய்ஸ்வாலிடம் அவர் நேரடியாக பேசியது பின்வருமாறு. “வெல்டன். உங்களுடைய பேட்டிங்கை பார்த்து முற்றிலும் மகிழ்ச்சியடைந்தேன். உங்களுடைய ஆட்டம் எப்படி முடிந்தது என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுடைய ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறோம். வெல்டன், இப்படியே தொடர்ந்து விளையாடுங்கள்”
இதையும் படிங்க: 99/5 டூ 109க்கு ஆல் அவுட்.. வங்கதேசத்தை தெறிக்க விட்ட ரசித் கான்.. பழிதீர்த்த ஆப்கானிஸ்தான் வெற்றி
“இதனுடன் ஒரு விஷயத்தை மட்டும் சேர்க்க விரும்புகிறேன். அதாவது தொடர்ந்து சதமடியுங்கள். அதை டாடி சதங்களாக மாற்றுங்கள். ஏனெனில் தாத்தாவாக (ஃகிராண்ட் பாதர்) இருக்கும் நான் தொடர்ச்சியாக ஃகிராண்ட் டாடி சதங்களை அடியுங்கள் என்று சொல்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதைப் புன்னகையுடன் கேட்டு மகிழ்ந்த கேட்ட ஜெய்ஸ்வால் “நன்றி சார்” என்று கவாஸ்கருக்கு பணிவான பதிலைக் கொடுத்தார்.