IPL 2023 : எப்டியும் நீங்க அடிச்சு மும்பை பிளே ஆஃப் போகாது – பேசாம இந்தியாவுக்காக அதை செய்ங்க, ரோஹித்துக்கு கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் 7 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தடுமாறி வருகிறது. கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 6 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த அந்த அணி இம்முறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கம்பேக் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் பந்து வீச்சு துறையில் பும்ரா இல்லாத நிலையில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஓரிரு போட்டிகளுடன் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

அதனால் எஞ்சிய பவுலர்கள் பொறுப்பின்றி ரன் மெஷின்களாக ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை வார்க்கும் நிலையில் பேட்டிங் துறையிலும் சூரியகுமார் யாதவ், இசான் கிசான் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பெரிய ரன்களை எடுக்க தடுமாறுகிறார்கள். அதை விட கடந்த வருடம் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்த ரோகித் சர்மா இந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டும் அரை சதமடித்தார்.

கவாஸ்கர் ஆலோசனை:
எஞ்சிய போட்டிகளில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வரும் அவர் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 181 ரன்களை மட்டுமே 25.86 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்து வருகிறார். அதை விட பும்ரா, போல்ட், பாண்டியா என தரமான பவுலர்களை வைத்து எதிரணிகளை மிரட்டிய அவர் தற்போது சுமாரான பவுலர்களை வைத்து வெற்றி காண முடியாமல் கேப்டன்ஷிப் செய்வதிலும் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் களத்தில் அடிக்கடி கோபத்தை காட்டும் அவர் சோர்வடைந்ததைப் போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Rohit

இந்நிலையில் இந்த சீசனில் பேட்டிங்கில் பெரிய அளவில் தடுமாறும் ரோகித் சர்மா தலைமையில் முதல் பகுதியின் முடிவில் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தடுமாறும் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல மிராக்கள் தான் நடக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனால் குறைந்தபட்சம் ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் வகையில் குறிப்பிட்ட சில போட்டிகளில் ஓய்வு எடுக்குமாறு ரோஹித்துக்கு ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் நான் சில மாற்றங்களை பார்க்க விரும்புகிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் இந்த சமயத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஃபிட்டாக புத்துணர்ச்சியுடன் ரோஹித் சர்மா களமிறங்குவதற்கு தேவையான ஓய்வை எடுங்கள் என்று நான் சொல்வேன். இருப்பினும் இந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் அவர் மீண்டும் விளையாடலாம். ஆனால் இப்போதைக்கு ஓய்வெடுத்து நிம்மதியாக மூச்சு விடுவதே அவருக்கு சரியானதாக இருக்கும்”

Gavaskar

“ஏனெனில் அவர் சற்று பதற்றத்துடன் காணப்படுகிறார். ஒருவேளை அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த கட்டத்தில் அவருக்கு சிறிய ஓய்வு தேவை என்று நான் நம்புகிறேன். அதை எடுத்துக் கொண்டு மீண்டும் கடைசி 3 – 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுங்கள். அப்போது தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் உங்களால் நல்ல ஃபார்மில் விளையாட முடியும்”

இதையும் படிங்க:IPL 2023 : முழுசா 4 ஓவர் கூட போட முடியல, அர்ஜுன் டெண்டுல்கர் வெறும் எக்ஸ்ட்ரா பவுலர் அவ்ளோ தான் – முன்னாள் வீரர் விமர்சனம்

“காரணம் தற்போதைய நிலைமையில் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மிராக்கள் தான் நடக்க வேண்டும். குறிப்பாக தற்சமயத்தில் விளையாடும் விதத்தைக் கொண்டு இறுதியில் அவர்களால் புள்ளி பட்டியலில் 3, 4 இடத்தைப் பிடித்து சிறப்பாக ஃபினிசிங் செய்ய முடியும். ஆனால் அதற்கு பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் அடுத்து வரும் போட்டிகளில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement