
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. அந்தப் போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்திய இந்தியா திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 202/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கையும் 20 ஓவரில் 202/5 ரன்கள் எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக இலங்கை 2/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக ஹசரங்கா வீசிய சூப்பர் ஓவரில் முதல் பந்திலேயே 3 ரன்கள் அடித்த சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். முன்னதாக அந்தப் போட்டியில் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் இந்தியா மிகவும் போராடி வென்றது என்றே சொல்லலாம்.
குறிப்பாக அபிஷேக் சர்மா அடிக்காவிட்டால் இந்திய பேட்டிங் திணறுவதாக இந்திய ரசிகர்களே அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர். அதே போல எப்படிப் போட்டாலும் அடித்து நொறுக்கக்கூடிய சூரியகுமார் கேப்டனாக பொறுப்பேற்றது தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் திணறி வருகிறார். அதிலும் நேற்றைய போட்டியில் அதிரடி காட்டத் தடுமாறிய சூரியகுமார் 12 (13) ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன் இலங்கையிடம் தடுமாறி வென்றது இந்தியாவின் நன்மைக்கே என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த தடுமாற்றத்தால் தங்களுடைய பலவீனம் மற்றும் முன்னேற வேண்டிய விஷயங்களை இந்தியா தெரிந்து கொண்டதாக கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் சூரியகுமாருக்கு அவர் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு.
“சூரியகுமார் கிளாஸ் பிளேயர் என்பதில் சந்தேகமில்லை. மைதானத்தில் நிலவும் வேகம், பவுன்ஸ் அல்லது சுழல் போன்ற சூழ்நிலைகளை கணிப்பதற்காக அவர் தமக்குத்தாமே சில பந்துகளை எதிர்கொள்ள நேரம் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் பெவிலியனிலிருந்து பிட்ச்சை பார்ப்பதற்கும் நேரடியாக சென்று பார்ப்பதற்கு வித்தியாசம் உள்ளது. சில நேரங்களில் பிட்ச்சில் ஆபத்து எதுவுமில்லை என்று பேட்ஸ்மேன் நினைக்கலாம்”
இதையும் படிங்க: இன்னும் 11 ரன்கள் போதும்.. விராட் கோலியின் சாதனையை தகர்த்து வரலாறு படைக்கப்போகும் – அபிஷேக் சர்மா
“ஆனால் தங்களுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முன் அவர்கள் பந்துகளை எதிர்கொண்டு சூழ்நிலையை உணர்வது அவசியம். ஃபைனலுக்கு முன் இப்படிப்பட்ட போட்டியை எதிர்கொண்டது இந்தியாவுக்கு நன்மை. நேற்றைய நாள் கடினமானதே தவிர மோசமான நாளாக இல்லை. நம்முடைய அணி கடைசி சில ஓவர்களில் தங்களுடைய அமைதியை வைத்து இலக்கைக் கட்டுப்படுத்தினர். ராணா கடைசி ஓவரில் வேகத்துக்கு பதிலாக கொஞ்சம் மெதுவான பந்துகளை போட்டிருக்கலாம். இறுதியில் குசால் பேரரா, நிஷாங்காவின் மீள்தன்மையைத் தாண்டி வென்றது நம்முடைய அணியின் பலத்தைக் காட்டுகிறது” என்று கூறினார்.