மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக நித்திஷ் ரெட்டி சதமடித்து அசத்தியுள்ளார். டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக விளையாடும் இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா 3, விராட் கோலி 36, ராகுல் 24, ஜடேஜா 17, ரிஷப் பண்ட் 28 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் சரிந்த இந்திய அணியை 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் – நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஃபாலோ ஆனிலிருந்து காப்பாற்றினார்கள்.
வரலாற்று சதம்:
அதில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் அவுட்டானார். ஆனால் நிதிஷ் ரெட்டி சதத்தை அடித்து 105* ரன்களுடன் களத்தில் உள்ளார். அதனால் 3வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 116 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் போராடினால் வெல்லலாம் என்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் நித்திஷ் ரெட்டி அடித்த இந்த சதம் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றின் சிறந்தது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
மேலும் உங்களுக்காக தன்னுடைய வேலையை தியாகம் செய்து கிரிக்கெட்டுக்கு ஆதரவளித்த உங்கள் அப்பாவை எப்போதும் நினைத்துக்கொண்டு பொறுப்புடன் விளையாடினால் பெரியாளாக வருவீர்கள் என்றும் அவரை கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நித்திஷ் ரெட்டி இந்த சதம் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றின் ஒரு சிறந்த சதமாக இருக்கும்”
கவாஸ்கர் ஆலோசனை:
“தற்போது முதல் சதத்தை அடித்துள்ள அவர் வருங்காலங்களில் இன்னும் நிறைய அடிப்பார். வருங்காலங்களில் அவர் நிறைய ரன்கள் குவிப்பதையும் நான் பார்ப்பேன். அவர் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரமாக வருவார். இருப்பினும் அதற்கு அவர் தன்னுடைய தந்தை மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் செய்த தியாகத்தை நினைவில் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: முதல் மேட்ச்லயே இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு.. நிதிஷ் ரெட்டியுடன் சுந்தரையம் பாராட்டிய ஜாம்பவான் சச்சின்
“இந்திய கிரிக்கெட்டால் தான் நிதிஷ் இங்கே இருக்கிறார். நம்மால் இந்திய அணி இல்லை என்பதை அவர் உறுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதைப் பின்பற்றி தமக்குத்தாமே உண்மையாக இருந்தால் அவருக்கு வெற்றிகரமான கேரியர் இருக்கிறது” என்று கூறினார். அதாவது இளம் வயதிலேயே சாதனைகளுக்கு மயங்காமல் தொடர்ந்து பொறுப்புடன் உழைத்து விளையாடினால் பெரியளவில் வர முடியும் என்று அவருக்கு கவாஸ்கர் ஆலோசனை கொடுத்துள்ளார்.



