வரலாற்று சிறப்புமிக்க 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அந்தத் தொடரில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே காணப்படுகிறது.
ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 2 தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த வரலாற்று வெற்றிகளை பெற்றது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்று எதிர்பார்ப்பு இங்குள்ள ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனால் இம்முறை இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கு:
மேலும் 2014க்குப்பின் இம்முறை இந்தியாவை வீழ்த்தி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்வோம் என கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன் உள்ளிட்ட பல ஆஸ்திரேலிய வீரர்களும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பேட்டிங், பவுலிங் துறையில் தரமான வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் எந்தளவுக்கு அசத்துகிறார்களோ அந்தளவுக்கு இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். அதே சமயம் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்லும் திறமை ஆஸ்திரேலிய அணியில் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே இது சமமான போட்டி மிகுந்த தொடராக இருக்கும் என்று தெரிவிக்கும் ஸ்டீவ் வாக் இது பற்றி பேசியது பின்வருமாறு.
விராட், பும்ரா அசத்துவார்களா:
“இது 2 நல்ல அணிகள் மோதும் சமமான தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களிடம் பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் அடங்கிய சிறப்பான வேகப்பந்து வீச்சு கூட்டணி இருக்கிறது. அதே போல அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகிய நல்ல ஸ்பின்னர்களும் இருக்கின்றனர். ஆனால் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் விராட் கோலி பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகள் சாவியாகும்”
இதையும் படிங்க: 2014இல் தோனி விட்டுட்டு போனப்போ.. இதை செஞ்சு தான் இந்திய டெஸ்ட் அணியை மீட்டெடுத்தேன்.. விராட் கோலி
“ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமான பவுலர். அவர் அதிக விக்கெட்டுகளை எடுத்தால் இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல வெளிநாடுகளில் விராட் கோலியின் செயல்பாடுகளை நாம் பார்த்துள்ளோம். அதே சமயம் ஆஸ்திரேலியாவும் நல்ல பவுலிங் அட்டாக்கை கொண்ட வலுவான அணி. எனவே 2 உயர்தரமான அணிகள் மோதும் இத்தொடர் அற்புதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.



