அண்மையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியோடு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் குழந்தை பிறப்புக்காக நாடு திரும்புவதால் வருகிற 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்க இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மீதமுள்ள போட்டிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் மீதமுள்ள இந்த 3 போட்டிகளிலும் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கோலியின் இந்த முடிவு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவன் ஸ்மித் விராட் கோலி இந்தியா திரும்புவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் கூறியதாவது : முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் பந்து வீச்சில் நான் விளையாடிய போது பந்து பேட்டில் விளிம்பில் பட்டு கேட்சாக மாறியது.
துரதிஷ்டவசமாக இதுபோன்று நடக்கத்தான் செய்யும். நான் ஆட்டம் இழப்பதற்கு முந்தைய இரண்டு பந்துகளும் ஓரளவு ஸ்விங் ஆகி திரும்பின. ஆனால் நான் ஆட்டமிழந்த பந்து நான் நினைத்த மாதிரி வரவில்லை. அஸ்வினின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளதால் அவருடைய அனுபவம் அவருக்கு பெருமளவில் உதவுகிறது. தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் அவரது பந்து வீச்சை திறம்பட எதிர் கொள்வேன் என நம்புகிறேன் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி கோலி குறித்து பேசிய அவர் : எஞ்சிய மூன்று போட்டிகளிலும் விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பாகும். முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் 74 ரன்கள் குவித்தது சிறப்பாக இருந்தது. அந்த டெஸ்ட் போட்டி முடிந்ததும் அவரை நான் களத்தில் சந்தித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனது வாழ்த்துக்களை உங்கள் மனைவியிடம் சொல்லி விடுங்கள் எனக் கூறினேன்.
அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவ்வேளையில் அவர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்தால் அவருக்கு நிறைய அழுத்தம் இருக்கம். எனவே ஆவர் முதல் குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்புவது என்று அவர் எடுத்திருக்கும் முடிவு பாராட்டுக்குரியது. அதற்கு அவர் தகுதியானவர் அவர் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல் அந்த தருணத்தை அவர் நிச்சயம் தவற விடக்கூடாது என்றும் ஸ்மித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.