
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனல் செல்ல அந்த தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியுள்ளது. முன்னதாக அந்த தொடரில் ஆஸ்திரேலிய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இந்திய ஸ்பின்னர் அஸ்வின் சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 2020 – 21 தொடரில் 64 ரன்கள் கொடுத்த அஸ்வின் அவரை 3 முறை அவுட்டாக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த முறை போல இம்முறை தம்மை அஸ்வினால் எளிதாக அவுட்டாக்க முடியாது என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஏனெனில் இம்முறை அஸ்வினை செட்டிலாக விடாமல் ஆரம்பத்திலேயே அடிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த தொடரில் முதல் போட்டியில் அஸ்வின் என்னை எட்ஜ் முறையில் அவுட்டாக்கி இரண்டாவது போட்டியில் லெக் ஸ்லிப் அவுட்டாக்கினார். பொதுவாக நான் ஆஸ்திரேலியாவில் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவுட்டாவதை விரும்ப மாட்டேன். ஏனெனில் வலது கை பேட்ஸ்மேனாக நீங்கள் இருக்கும் போது அவர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும்”
“ஆனால் நல்ல பவுலரான அஸ்வின் ஓரளவு நல்ல திட்டத்துடன் வருவார். இருப்பினும் கடந்த தொடரிலேயே 3வது போட்டியில் சிட்னி மைதானத்தில் அவருக்கு எதிராக நான் கொஞ்சம் சிறப்பாக விளையாடினேன். அதுதான் இம்முறை எனக்கான சாவி. இம்முறை எப்படி பந்து வீசினாலும் அவரை நான் செட்டிலாக விடாமல் பேட்டிங் செய்வேன்”
“5 போட்டிகள் கொண்ட தொடரில் நீங்கள் விளையாடும் போது ஏதேனும் ஒரு பவுலருக்கு எதிராக ஆரம்பத்திலேயே நீங்கள் தடுமாறினால் பின்னர் 10 இன்னிங்ஸ் அவருக்கு எதிராக விளையாட வேண்டும். எனவே மனதளவில் நீங்கள் அது போன்ற சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை போல 5 போட்டிகள் கொண்ட தொடரில் நீங்கள் ஒளிய முடியாது. அஸ்வினும் நானும் கடந்த பல வருடங்களில் நல்ல போட்டியை கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட் முக்கியம்.. இதை செய்யலன்னா ஆஸியில் இம்முறை இந்தியா ஜெய்க்கிறது கஷ்டம்.. ஹர்பஜன்
அவர் கூறுவது போல கடந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஸ்மித்தை குறைந்த ரன்களில் அஸ்வின் அவுட்டாக்கி அசத்தினார். ஆனால் மூன்றாவது போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்மித் 131, 81 ரன்கள் அடித்து பதிலடி கொடுத்தார். அதே போல இம்முறையும் அஸ்வினை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக அவர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.