இந்திய அணிக்கெதிரான இந்த ஒரு சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த ஸ்மித் – விவரம் இதோ

Smith

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக பெரிய அளவில் ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆன ஸ்டீவ் ஸ்மித் முதல் இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில் சேர்த்து 10 ரன்களை மட்டுமே அடித்து சற்று ஏமாற்றத்தை கொடுத்திருந்தார். அதனால் அவர் இந்திய அணிக்கு எதிராக தடுமாறுவதாகவும் சிலர் விமர்சித்து இருந்தனர்.

smith

ஆனால் தற்போது துவங்கியுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக விளையாடி வரும் இவர் முதல் இன்னிங்சில் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதுவும் பந்துவீச்சாளர்கள் இவர் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ரன் அவுட் மூலமாக இவர் முதல் இன்னிங்சில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் விளையாடி வரும் இவர் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் 29 ரன்களை குவித்து களத்தில் உள்ளார்.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். 76 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 27 ஆவது சதம் ஆகும். இதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் க்ரீம் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆலன் பார்டர் ஆகியோருடன் இணைந்து 27 சதங்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.

ஸ்மித் 136 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த 27 வது சதத்தை அடித்துள்ளார். இதற்கு முன்னர் பிராட்மேன் 70 இன்னிங்ஸ்களில் விளையாடி 27 சதங்களை விளாசி முதலிடத்திலும், ஸ்மித் தற்போது அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் 141 ஆவது இன்னிங்சில் தான் தங்களது 27 வது சதத்தை அடித்தனர் .மேலும் ஸ்மித் அடித்த சதங்கள் 14 சதங்கள் சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவை ஆகும்.

- Advertisement -

Smith

அவர் இந்தியாவுக்கு எதிராக தற்போது 8-வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக அதிக செஞ்சுரி அடித்த வீரர்கள் பட்டியலில் கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங் ஆகியோரை சமன் செய்துள்ளார். மேலும் ஒரு செஞ்சுரி அடிக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு எதிராக அதிகம் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.