ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோத உள்ள 2024 – 25 பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடர் நவம்பர் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது.
மறுபுறம் கடந்த தொடர்களில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோற்றது மட்டுமின்றி 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா தவித்து வருகிறது. எனவே இம்முறை அந்தத் தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.
ஓப்பனிங்கில் ஸ்டீவ் ஸ்மித்:
அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய அணி புதிய துவக்க வீரராக சமீபத்திய தொடர்களில் களமிறக்கியது. ஆனால் ஓப்பனிங்கில் தடுமாற்றமாகவே விளையாடிய ஸ்மித் 8 இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்தார். அந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாட ஆர்வமில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதனால் ஸ்டீவ் ஸ்மித் இந்திய தொடரிலும் உஸ்மான் கவாஜாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மித் 4வது பேட்டிங் இடத்தில் தான் விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஜார்ஜ் பெய்லி அறிவிப்பு:
“பட் கமின்ஸ், ஆண்ட்ரே மெக்டொனால்ட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அது பற்றி விவாதித்து வருகிறார்கள். கேமரூன் கிரீன் காயத்தை பற்றியும் அவர்கள் தனியாக விவாதித்து வருகிறார்கள். எது எப்படியிருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித் ஓபனிங் இடத்திற்கு பதிலாக மீண்டும் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ஆர்வத்தை கொண்டுள்ளதாக நினைக்கிறேன். கமின்ஸ், மெக்டொனால்ட் ஆகியோர் கோடைக்காலத்தில் ஸ்மித் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்பதை என்னிடம் உறுதி செய்துள்ளனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: என்ன ஒரு முட்டாள் தனம்.. பாபர் அசாம் விடயத்தில் பாகிஸ்தான் செய்தது தவறு – மைக்கல் வாகன் விளாசல்
இது இந்தியாவுக்கு மிகவும் பாதகமான திட்டம் என்றே சொல்லலாம். ஏனெனில் 4வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 6000க்கும் மேற்பட்ட ரன்களை 61.51 ரன்களை குவித்து அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மீண்டும் அவர் தன்னுடைய பழைய இடத்தில் களமிறங்கி கண்டிப்பாக சொந்த மண்ணில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்றே சொல்லலாம்.



