ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளை வீழ்த்திய இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
அந்த சுற்றில் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக பெரும்பாலான ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அசத்தும் இந்தியா எளிதாக நாக் அவுட் சுற்றை தொட்டு விடுகிறது. ஆனால் அழுத்தமான நாக் அவுட் சுற்றில் சொதப்பும் இந்தியா கோப்பையை கோட்டை விட்டு வருகிறது.
பிளேமிங் கருத்து:
இந்நிலையில் பேட்டிங்க்கு மிகவும் சவாலான அமெரிக்காவின் நியூயாரர்க் பிட்ச்சில் லீக் சுற்றில் இந்தியா போராடி வெற்றி கண்டதாக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஆபத்தை தாண்டியுள்ள இந்தியா குறைந்தது இந்த தொடரில் ஃபைனலில் விளையாடும் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“நியூயார்க் நகரில் பந்து வேகமாக இருந்ததை பார்த்தீர்கள். பந்து வீச்சாளர்களின் பார்வையிலும் அங்கே சமமற்ற பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்தது. ஆனால் அதை இந்தியா சிறப்பாக சமாளித்தனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் அவர்கள் முதிர்ச்சியுடன் சேசிங் செய்தனர் என்று நினைக்கிறேன். எனவே அடுத்து வரும் போட்டிகளிலும் சில கடினமான மைதானங்களில் அவர்கள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்”
“அவர்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டனர். ஏனெனில் நியூயார்க் மைதானம் எப்படி இருக்கும் என்ற ஐடியா யாருக்கும் இல்லை. அங்கு நிலவிய சவால்களை நன்றாக சமாளித்த இந்தியா தங்களுடைய அனைத்து அடிப்படைகளையும் கவர் செய்துள்ளதாக கருதுகிறேன். அதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் இன்னும் வலுவாக விளையாடுவார்கள். என்னுடைய பார்வையில் இந்திய அணி ஃபைனலில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது”
இதையும் படிங்க: லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான், நியூஸிலாந்து.. 2026 டி20 உ.கோ தொடருக்கு தகுதியானது எப்படி? ரூல்ஸ் என்ன?
“அந்த அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அதே போல ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ளும் வீரர்களும் இருக்கின்றனர். நியூயார்க்கை விட வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுழல் பந்து வீச்சு அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்தோம். எனவே இந்தியா தங்களுடைய வேலையை செய்துள்ளதாக நான் பார்க்கிறேன். செமி ஃபைனல் மற்றும் ஃபைனலை நோக்கி செல்லும் நாம் இப்படித்தான் விளையாட விரும்புவோம்” என்று கூறினார்.



