கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 13வது ஐபிஎல் சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்ததில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. 13வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை 5 ஆவது முறையாக கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த 13வது ஐபிஎல் சீசனில் தான் சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிஎஸ்கே வீரர்களுக்கு வயதாகியதும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா அணியிலிருந்து விலகியதும் தான். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங் 2021ஐபில் தொடருக்காக தனது அணியின் புதுமுக வீரர்களை தேர்வு செய்து வருகிறார். இதை தொடர்ந்து அனைத்து அணிகளும் வீரர்களை தேடும் முயற்சியில் இருக்கிறது.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி முடித்தது. இந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் தனது முழு திறமையையும் வெளிக்காட்டி உள்ளார். அதுமட்டுமின்றி இந்த டி20 தொடரில் தொடர் நாயகன் கோப்பையையும் செய்ஃபெர்ட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். அப்போது டிம் செய்ஃபர்ட்டின் அதிரடியான ஆட்டத்தை கண்ட ஸ்டீபன் பிளமிங் மிரண்டு போய் உள்ளார். நியூசிலாந்து தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட்டின் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஸ்டீபன் பிளமிங் வர்ணனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஸ்டீபன் பிளமிங் “ மஞ்சள் நிற சீருடையில் ஐபிஎல் தொடரில் ஒரு அணி உள்ளது. அந்த அணி இவர் மீது குறி வைத்துவிட்டது” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரை தேர்ந்தெடுப்பது போல் பேசியுள்ளார். இதனால் நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் சி.எஸ்.கே அணி அவரை ஏலத்தில் எடுத்து துவக்க வீரராக விளையாட வைக்கும் என்று தெரிகிறது.