நிறுத்தப்பட்ட மோக்கா விளம்பரம், ஆசிய கோப்பைக்காக ரசிகர்களுக்கு கேப்டன் ரோஹித் வைத்த கோரிக்கை இதோ

Rohit Sharma Jersey
- Advertisement -

கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஐசிசி 2021 டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. மேலும் 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பையை தொட முடியாத கதைக்கும் 2013க்குப்பின் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கும் இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு தயாராகும் வகையிலேயே ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் இந்தியா விளையாடி வருகிறது. அதற்காக தரமான வீரர்களை கண்டறியும் வகையில் மேற்குறிப்பிட்ட தொடர்களில் நிறைய இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வேக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

- Advertisement -

ஆசிய கோப்பை:
அதை தொடர்ந்து துபாயில் நடைபெறும் வரலாற்றின் 15-ஆவது ஆசிய கோப்பையில் இந்தியா களமிறங்க உள்ளது. முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியால் துபாய்க்கு மாற்றப்பட்டு வரும் ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளது. ஆசியாவின் டாப் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த வருடம் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெற உள்ளது.

கடைசியாக இதே துபாயில் கடந்த 2018இல் 50 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற ஆசிய கோப்பை ஃபைனலில் வங்கதேசத்தை தோற்கடித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதால் இம்முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. மேலும் வரலாற்றில் 7 ஆசிய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா இம்முறையும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28இல் பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

நிறுத்தப்பட்ட மோக்கா:
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் வரலாற்றில் 1992 முதல் நடைபெற்ற அத்தனை உலக கோப்பைகளிலும் பாகிஸ்தானிடம் தோல்வியே அடையாமல் இந்தியா வெற்றிநடை போட்டது. அதனால் உலக கோப்பை என்றாலே பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்து விடும் என்ற லேசான கர்வமும் இந்தியர்களுக்கு ஏற்பட்டது. அதன் உச்ச கட்டமாக அந்த போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் “மோக்கா மோக்கா” என்ற விளம்பரத்தை உருவாக்கி பாகிஸ்தான் தோல்வியடைந்த தருணங்களை வைத்து ஒரு தலைபட்சமாக விளம்பரப்படுத்தியது.

ஆரம்பத்தில் அது பிரபலமான நிலையில் விளையாட்டு என்றால் ஏதோ ஒருநாள் தோல்வியடைந்தே தீரவேண்டும் என்ற விதிப்படி கடந்த 2021 டி20 உலக கோப்பையில் இதே துபாயில் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் மண்ணை கவ்விய இந்தியா அவமான தோல்வியை சந்தித்தது. அதனால் முதலில் அந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தை அடித்து நொறுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோபமடைந்தனர். அதன் காரணமாக திருந்தியுள்ள அந்நிறுவனம் இம்முறை ஆசிய கோப்பையை ஒளிபரப்ப உள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை முதல் முறையாக மோக்கா மோக்கா விளம்பரத்தை நிறுத்திவிட்டு சரிசமமான விளம்பரத்தை செய்யத் துவங்கியுள்ளது.

ரோஹித்தின் மெசேஜ்:
அந்த விளம்பரத்தில் தோன்றியுள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா 7 ஆசிய கோப்பைகளை வென்று நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட 140 கோடி இந்தியர்களும் ஆதரவு கொடுத்தால்தான் தங்களால் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் கோப்பையை வெல்ல முடியும் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

“ஆசிய கோப்பைகளை 7 முறை வென்றுள்ளோம். நம்பர் ஒன் அணியாக இருந்து நிறைய உலக சாதனைகளை படைத்து வருகிறோம். ஆனால் 140 கோடி இந்திய ரசிகர்கள் “இந்தியா இந்தியா” என்று விண்ணதிர முழங்கி கொடுக்கும் ஆதரவை விட எங்களுக்கு வேறு எந்தப் பெருமையும் இருக்க முடியாது. எனவே வாருங்கள் அந்த பெருமையுடன் உலக கோப்பைக்கு செல்வோம். அதற்கு முன்பாக ஆசிய கோப்பையை வெல்வோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement