
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை வென்றது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி செப்டம்பர் 26ஆம் தேதி நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி அபாரமாக பேட்டிங் செய்து 602-5 ரன்கள் குவித்து அசத்தியது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 500 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இலங்கை சாதனையும் படைத்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 182*, குசால் மெண்டிஸ் 106*, தினேஷ் சண்டிமால் 116, மேத்தியூஸ் 88 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதன் பின் பேட்டிங் செய்த நியூசிலாந்து சுழலுக்கு சாதகமான மைதானத்தில் மோசமாக விளையாடி 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் இலங்கைக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் அவுட்டான நியூசிலாந்து குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 26 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் 512 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை மீண்டும் பேட்டிங் செய்யுமாறு நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பேட்டிங் செய்த நியூசிலாந்து முழுமூச்சுடன் போராடியும் 360 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவோன் கான்வே 61, கேன் வில்லியம்சன் 46, டாம் பிளண்டல் 60, கிளன் பிலிப்ஸ் 78, மிட்சேல் சான்ட்னர் 67 ரன்கள் எடுத்தும் படுதோல்வியை தவிர்க்க முடியவில்லை.
மறுபுறம் இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கைக்கு அதிகபட்சமாக நிஷான் பெரிஸ் 6, பிரபத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒய்ட்வாஷ் செய்த இலங்கை கோப்பையை வென்று சொந்த மண்ணில் நீண்ட நாட்கள் கழித்து அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளது.
இதற்கு சமீபத்தில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற சனாத் ஜெயசூர்யா முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். அவர் வந்த பின் சமீபத்தில் இந்தியாவை ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து வீழ்த்திய இலங்கை தற்போது 2009க்குப்பின் 15 வருடங்கள் கழித்து நியூஸிலாந்துக்கு எதிராக ஒரு தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: அன் கேப்டு வீரராக தோனி தக்கவைக்கப்பட்டால் அவர் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – விவரம் இதோ
மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 55.56% புள்ளிகளுடன் இலங்கை 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2021 ஃபைனலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் வில்லன் நியூஸிலாந்து 37.50% புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு சரிந்துள்ளதால் 2025 ஃபைனல் கனவு கிட்டத்தட்ட நொறுக்கியுள்ளது.