
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் 240/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 40, குசால் மெண்டிஸ் 30, கமிண்டு மெண்டிஸ் 40, வெல்லலாகே 39 ரன்கள் எடுத்து அசத்தினர்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் 241 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய 64 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்புறம் சுப்மன் கில் 35, விராட் கோலி 14, சிவம் துபே 0, ஸ்ரேயாஸ் ஐயர் 7, கேஎல் ராகுல் 0 ரன்களில் ஜெஃப்ரி வாண்டர்சே சுழலில் அவுட்டாகி இந்தியாவை அழுத்தத்தின் கீழ் தள்ளினர்.
இலங்கை வெற்றி:
அதனால் மிடில் ஆர்டரில் அக்சர் பட்டேல் 44, வாசிங்டன் சுந்தர் 15 ரன்கள் எடுத்து போராடியும் 42.2 ஓவரில் ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசி வெற்றி கண்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள இலங்கை 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
மறுபுறம் முதல் போட்டியை போலவே நல்ல துவக்கம் கிடைத்தும் கடைசியில் சொதப்பிய இந்தியா பரிதாபமாக தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் வேண்டர்சே நம்ப முடியாத அளவுக்கு அபாரமாக செயல்பட்டு இந்தியாவை தோற்கடித்ததாக இலங்கை கேப்டன் அசலங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது காயமடைந்த ஹசரங்காவுக்கு பதிலாக அவர் அசத்தியுள்ளதால் 3வது போட்டியில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுப்பதில் தமக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் அசலங்கா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த பிட்ச்சில் பேட்டிங்கில் நாங்கள் எடுத்த ரன்களில் எனக்கு மகிழ்ச்சி. 240 ரன்கள் போதும் என்றே நான் நினைத்தேன்”
இதையும் படிங்க: அவரோட விக்கெட் எடுத்ததுமே நம்பிக்கை வந்துடுச்சு.. இந்தியாவை சாய்த்த திட்டம் பற்றி.. ஜெப்ரி பேட்டி
“ஜெஃப்ரி நம்ப முடியாத பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவர் இந்தளவுக்கு அசத்தியுள்ளதால் அடுத்த போட்டியில் தேவையான தேர்வுகளை செய்வது கேப்டனான எனக்கு கண்டிப்பாக தலைவலியாக இருக்கும். ஜெஃப்ரி பந்து வீச வரும் போது இந்தியா ஓவருக்கு 9 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தது. இப்போதும் நான் முதலில் பேட்ஸ்மேனாக செயல்படுகிறேன். பின்பு தான் சில ஓவர்கள் பந்து வீசுகிறேன்” என்று கூறினார்.