இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில் இரண்டாவது போட்டி அக்டோபர் 15ஆம் தேதி தம்புலா நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பதும் நிசாங்கா – குசால் மெண்டிஸ் 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். குறிப்பாக சமர் ஜோசப் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்து நிசாங்கா உடலில் பட்டு பவுண்டரி சென்றது. ஆனால் அதற்கடுத்த 5 பந்துகளில் 4, 4, 4, 4, 4 என ஃஜோசப்புக்கு எதிராக நிசாங்கா அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை தெறிக்க விட்டார்.
இலங்கை அசத்தல்:
அப்படி நன்றாக விளையாடிய அந்த ஜோடியில் மெண்டிஸ் 26 (25) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த குசால் பெரேரா அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (16) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அரை சதமடித்த நிசாங்கா 54 (49) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த அசலங்கா 9, ராஜபக்சா 5*, ஹசரங்கா 5* ரன்கள் எடுத்தனர்.
அதனால் 20 ஓவரில் இலங்கை 162-5 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ரொமாரியா செபார்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 163 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் 5, எவின் லெவிஸ் 7, ஆண்ட்ரே பிளட்சர் 4 ரன்களில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இலங்கை ஸ்பின்னர்களிடம் அவுட்டானார்கள்.
சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்:
அதனால் 22-4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அடுத்து வந்த ராஸ்டன் சேஸ் 0, மோட்டி 4 ரன்களில் அவுட்டாகி பின்னடவை ஏற்படுத்தினர். அதனால் மேலும் சரிந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு கேப்டன் போவல் 20, ரூத்தர்போர்ட் 14 ரன்கள் எடுத்துப் போராடி அவுட்டானார்கள். இறுதியில் அந்த அணியை 16.5 ஓவரில் இலங்கை 89 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஒருவேளை சுப்மன் கில் ஆடலனா அவருக்கு பதிலா இவர்தான் பிளேயிங் லெவனில் விளையாடுவார் – விவரம் இதோ
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இலங்கைக்கு அதிகபட்சமாக கேப்டன் அசலங்கா, ஹஸரங்கா, தீக்சனா தலா 1, துணித் வெல்லலாகே 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்த இலங்கை 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. மறுபுறம் சமீபத்தில் திறமை இருந்தும் ஒருநாள் தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா சிக்கியதைப் போல வெஸ்ட் இண்டீஸ் இப்போட்டியில் அதிரடியாக விளையாட முடியாமல் வலையில் விழுந்து தோல்வியை சந்தித்தது.