
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டுள்ளார். அவருக்கு பதில் 2027 உலகக் கோப்பை கருத்தில் கொண்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அது போக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல உதவிய ரவீந்திர ஜடேஜாவும் ஆஸ்திரேலியா தொடரில் கழற்றி விடப்பட்டுள்ளார். அதே போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டுள்ளதும் பலரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடைசியாக சஞ்சு சாம்சன் 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடினார்.
அத்தொடரின் கடைசிப் போட்டியில் சதத்தை அடித்த அவர் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். ஆனால் அதன் பின் இதுவரை அவருக்கு இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு துருவ் ஜுரேலை 2வது விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அநியாயம் நடப்பதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் இது நியாயமற்ற முடிவு. தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் சதத்தை அடித்த காரணத்திற்காக சஞ்சு அணியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரரின் இடத்தில் தொடர்ச்சியாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது”
“ஏனெனில் ஒருநாள் சஞ்சுவை 5வது இடத்தில் விளையாட வைக்கும் நீங்கள் மற்றொரு நாள் ஓப்பனிங்கில் விளையாட வைக்கிறீர்கள். சில நேரங்களில் அவரை நீங்கள் 7 அல்லது 8வது இடத்தில் களமிறக்குகிறீர்கள். தற்போது அந்த வாய்ப்பையும் அவருக்கு கொடுக்காத நீங்கள் துருவ் ஜுரேலை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். திடீரென அவர் எப்படி அன்னிக்குள் வந்தார்? சாம்சன் பிளேயிங் லெவனில் இருக்கிறாரோ இல்லையோ அவருக்கு முதலில் வாய்ப்பை கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஜெய்த்தாலும் தோத்தாலும்.. இன்னும் 5 மாதத்தில் காலியாகும் சூரியகுமாரின் டி20 கேப்டன்ஷிப்.. அகர்கர் சூசக அறிவிப்பு
“இது போன்ற தேர்வுகள் நம்முடைய வீரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் எம்மாதிரியான தேர்வு நடைபெறும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. கடைசியாக இந்தியா விளையாடிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஜெய்ஸ்வால் இல்லை. தற்போது ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ள அவருடைய இடம் அடுத்த நிமிடம் காலியாகலாம். இப்படி அனைத்து நேரமும் மாற்றங்கள் செய்வது வீரர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும்” என்று விமர்சித்துள்ளார்.