ஆசிய கோப்பை 2022 : எதார்த்தமாக வந்து ஆர்ப்பாட்டமின்றி வென்ற இலங்கை – படைத்த 3 சூப்பர் சாதனைகள்

SriLanka Asia Cup 2022
- Advertisement -

அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இலங்கை – பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று துபாயில் நடைபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு குசால் மெண்டிஸ் 0, நிஷாங்கா 7, டீ சில்வா 28, குணத்திலகா 1, கேப்டன் சனாக்கா 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

PAKvsSL

- Advertisement -

அதனால் 58/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணி 100 ரன்களை தாண்டாது என கவலையடைந்த அந்நாட்டு ரசிகர்களுக்கு 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஜபக்சா – ஹஸரங்கா ஆகியோர் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். அதில் ஹசரங்கா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (21) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ராஜபக்சா 6 பவுண்டரி 3 சிக்சருடன் 71* (45) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார்.

அபார வெற்றி:
அதனால் 20 ஓவர்களில் இலங்கை 170/6 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 176 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 22/2 என தடுமாறிய அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய இப்திகர் அஹமத் 32 (31) ரன்களில் போராடி ஆட்டமிழந்தார். அவருடன் போராடிய மற்றொரு தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 55 (49) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் இலங்கையின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

SL vs PAK Babar Azam

அதனால் 20 ஓவர்களில் பாகிஸ்தானை 147 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும் ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மறுபுறம் துபாயில் டாஸ் வென்றால் வெற்றி என்ற நிலைமை இருந்தும் அதிர்ஷ்டத்தை பயன்படுத்த தவறிய பாகிஸ்தான் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது.

- Advertisement -

எதார்த்த வெற்றி:
முன்னதாக ஜெயவர்தனே போன்ற ஜாம்பவான்களுக்கு பின் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் சமீப காலங்களில் திண்டாடும் இலங்கை தரவரிசையில் 8வது இடத்தில் தவிப்பதால் இந்த கோப்பையை வெல்லாது என்று ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோற்று தோல்வியுடன் இத்தொடரை துவங்கிய அந்த அணி அதற்காக துவளாமல் வங்கதேசத்தை தோற்கடித்து கொதித்தெழுந்தது. அதே நெருப்புடன் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்த அந்த அணி இறுதிப் போட்டியிலும் டாஸ் தோற்ற பின்பும் 58/5 என பேட்டிங்கில் சுருண்ட பின்பும் அதிலிருந்து மீண்டெழுந்து பதிவு செய்துள்ள இந்த வெற்றி உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

Asia Cup Dhasun Shanaka Sri Lanka

மொத்தத்தில் ஆர்ப்பாட்டமின்றி யதார்த்தமான இளம் வீரர்களை வைத்து சாம்பியனை போல் விளையாடிய இலங்கை 6வது ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதைவிட இந்த வெற்றியை துவண்டு கிடக்கும் இலங்கை கிரிக்கெட்டை மறுமலர்ச்சி அடைய வைக்கப் போகிறது என்றே கூறலாம். இந்த போட்டியில் இலங்கை படைத்த சில சிறப்பான சாதனைகள் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. இப்போட்டியில் வென்ற இலங்கை ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. 1984 முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் 61 போட்டிகளில் பங்கேற்ற இலங்கை 40 வெற்றிகளை பதிவு செய்து இந்த சாதனை படைத்துள்ளது. 2வது இடத்தில் 59 போட்டிகளில் 39 வெற்றிகளுடன் இந்தியா உள்ளது. இருப்பினும் கோப்பைகள் அடிப்படையில் இந்தியா (7) வெற்றிகரமாக அணியாக திகழ்கிறது.

IND vs SL

2. இப்போட்டியில் 170 ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை 2012க்குப்பின் உலகக்கோப்பை அல்லது ஆசிய கோப்பை போன்ற எந்த ஒரு பெரிய தொடரின் இறுதி போட்டியிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற சாதனை படைத்துள்ளது. கடைசியாக கடந்த 2012இல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்கள் கட்டுப்படுத்தியதே கடைசியாக இருந்தது.

3. இப்போட்டியில் 58/5 என இலங்கை தவித்த போது 71* (45) ரன்கள் குவித்து காப்பாற்றிய ராஜபக்சா ஒரு பலத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் 4வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சூப்பர் சாதனை படைத்துள்ளார்.

Advertisement