523 ரன்ஸ்.. 38 சிக்ஸர் மழை.. மாறிமாறி அடித்துக்கொண்ட ஹைதராபாத் – மும்பை போட்டி.. 2 புதிய உலக சாதனை

SRH vs MI 3
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8வது போட்டி உச்சகட்ட விருந்து படைத்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் சரவெடியாக விளையாடி 20 ஓவரில் 277/3 ரன்கள் சேர்த்தது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி சாதனையை ஹைதராபாத் படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, ஹென்றிச் க்ளாஸென் 80*, மார்க்ரம் 42* ரன்கள் அடித்து வரலாறு படைக்க உதவினர். அதன் பின் 278 ரன்களை துரத்திய மும்பை முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 246/5 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக திலக் வர்மா 64, டிம் டேவிட் 42* ரன்கள் எடுத்து போராடியும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதன் காரணமாக மும்பைக்கு தோல்வியே கிடைத்தது.

- Advertisement -

உலக சாதனை போட்டி:
அந்த வகையில் இப்போட்டியில் ஹைதெராபாத் 277, மும்பை 246 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 523 ரன்கள் குவித்தன. இதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்ட முதல் போட்டி என்ற சாதனையை இப்போட்டி படைத்தது. அத்துடன் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டியாக ஹைதெராபாத் – மும்பை போட்டி சாதனை படைத்தது.

இதற்கு முன் கடந்த 2010 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் 469 ரன்கள் அடிக்கப்பட்டதே முந்தைய அதிகபட்சமாகும். அதை விட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (523) அடிக்கப்பட்ட போட்டி என்ற உலக சாதனையும் நேற்றைய ஹைதெராபாத் – மும்பை ஆட்டம் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2023இல் செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் 517 ரன்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இது போக இப்போட்டியில் ஹைதெராபாத் 18, மும்பை 20 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்ஸர்கள் அடித்தன. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற உலக சாதனையும் ஹைதராபாத் – மும்பை ஆட்டம் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2018 ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பால்க் – காபூல் அணிகள் மற்றும் 2019 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா – செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தலா 37 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 120 ஸ்ட்ரைக் ரேட்டில் தடவுனா எப்படி.. மோசமான கேப்டன்ஷிப்.. பாண்டியாவின் 2 தவறை விளாசிய இர்பான் பதான்

அதே போல ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்சர்களை அடிக்கப்பட்ட போட்டியாக இப்போட்டி சாதனை படைத்தது. இதற்கு முன் 2018இல் சென்னை – பெங்களூரு, 2020இல் சென்னை – ராஜஸ்தான், 2023இல் சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய 3 போட்டிகளில் தலா 32 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

Advertisement