கடைசி வரை வராத ஹஸரங்கா.. ஹைதெராபாத் வாங்கிய 22 வயது தமிழ் வீரர்.. யார் இந்த விஜயகாந்த்

Vijayakanth
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து இலங்கை வீரர் வணிந்து ஹஸரங்கா வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் அவர் டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார். இதற்கு முன் பெங்களூரு அணிக்காக 10.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் ஹைதராபாத் அணியில் இவ்வளவு குறைந்த தொகைக்கு விலை போனது ஆச்சரியமாக அமைந்தது.

அந்த நிலையில் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் முழுமையாக விளையாடிய ஹஸரங்காவுக்கு விதிமுறையை மீறியதால் டெஸ்ட் தொடரில் விளையாட ஐசிசி தடை விதித்தது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் காயத்தால் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

விஜயகாந்த் சேர்ப்பு:
ஆனால் வங்கதேச தொடரில் காயத்தை சந்திக்காத அவர் ஹைதராபாத் அணி தமக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாலேயே ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்று செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் தற்போது உண்மையாகவே இடது காலில் காயத்தை சந்தித்துள்ளதால் 2024 ஐபிஎல் தொடரிலிருந்து ஹசரங்கா விலகுவதாக ஹைதராபாத் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த 22 வயதாகும் விஜயகாந்த் வியாஸ்காந்த் 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் ஹைதராபாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்த தமிழ் பையனான விஜயகாந்த் உள்ளூர் கிரிக்கெட்டில் யூனியன் வங்கிக்காக 6 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக 1 போட்டியில் விளையாடிய அவர் துபாயில் நடைபெற்ற ஐஎல் டி20 தொடரில் 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அத்துடன் இலங்கை பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் அணிக்காக அவர் 13 விக்கெட்டுகளை 6.68 என்ற சிறப்பான எகனாமியில் எடுத்து அசத்தினார். அந்த வகையில் மொத்தமாக 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விஜயகாந்த் 42 விக்கெட்டுகளை 6.76 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ளார். இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரிலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: சி.எஸ்.கே கொல்கத்தா மேட்ச்சுக்கு என் குடும்பமே வந்தாங்க.. ஆனா அங்க நடந்ததே வேற – வருண் சக்ரவர்த்தி சுவாரசிய தகவல்

சொல்லப்போனால் கடந்த வருடமே ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா அவரை நெட் புலராக ஐபிஎல் தொடருக்கு கொண்டு வந்தார். அந்த நிலையில் தற்போது நேரடியாகவே ஹைதராபாத் அணிக்காக முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு விஜயகாந்த்துக்கு கிடைத்துள்ளது. அங்கே பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காவிட்டாலும் பயிற்சியாளர் முத்தையா முரளிதரனிடம் ஆலோசனைகளை பெற்று முன்னேறுவதற்கான வாய்ப்பு விஜயகாந்த்துக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement