41 சிக்ஸ்.. பஞ்சாப்பின் ஆறுதல் வெற்றியையும் பறித்த ஹைதராபாத்.. அபிஷேக் சர்மா புதிய சாதனை

SRH vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் 69வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஹைதெராபாத்துக்கு எதிராக ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய பஞ்சாப் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் – அதர்வா டைட் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினர்.

அந்த வகையில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப் அணிக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் அதர்வா டைட் 46 (27) ரன்களில் நடராஜன் வேகத்தில் அவுட்டானார். அப்போது வந்த ரிலீ ரோசவ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரப்சிம்ரன் சிங் அரை சதமடித்து 71 (45) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஹைதெராபாத் வெற்றி:
ஆனால் அடுத்ததாக வந்த சசாங் சிங் 2 (4) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவரில் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிலீ ரோசவ் 49 (24) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இறுதியில் கேப்டன் ஜிதேஷ் சர்மா அதிரடியாக 32* (15) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் பஞ்சாப் 214/5 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 215 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு முதல் பந்திலேயே அர்ஷிதீப் வேகத்தில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா தம்முடைய ஸ்டைலில் அடித்து நொறுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் திரிபாதி 33 (18) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் இந்த பக்கம் பஞ்சாப் பவுலர்களை பந்தாடிய அபிஷேக் ஷர்மா 5 பவுண்டரி 6 சிக்சருடன் 66 (28) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் நித்திஸ் ரெட்டி 37 (25), ஹென்றிச் க்ளாஸென் 42 (26), அப்துல் சமத் 11* (8) சன்விர் சிங் 6* (4) ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரிலேயே 215/6 ரன்கள் எடுத்த ஹைதராபாத் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: மனுஷன ஃபிரீயா விட மாட்டீங்களா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை கோபமாக விளாசிய ரோஹித் சர்மா

அதனால் 14 போட்டிகளில் ஹைதராபாத் 8வது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 2, அர்ஷிதீப் 2 விக்கெட்டுகளை எடுத்தும் பஞ்சாப் ஆறுதல் வெற்றியை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக இப்போட்டியில் அடித்த 6 சிக்ஸர்களையும் சேர்த்து அபிஷேக் சர்மா இந்த வருடம் 41 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023 சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் ரியான் பராக் 40 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement