தோற்றாலும் வீழாத தமிழன் ! மும்பைக்கு தோல்வியை பரிசளித்த நடராஜன், ஹைதராபாத் திரில் வெற்றி – நடந்தது இதோ

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 17-ஆம் தேதி நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் ஏற்கனவே தொடர் தோல்விகளால் முதல் அணியாக மும்பை லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் ஹைதராபாத்துக்கு இந்த போட்டி வாழ்வா சாவா என்ற போட்டியாக அமைந்தது. அந்த நிலைமையில் தனது கோட்டையான வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அபிஷேக் வர்மா 9 (10) ரன்களில் அவுட்ராகி ஏமாற்றினார்.

Rahul Tripati

- Advertisement -

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிப்பாதி நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்ற மற்றொரு இளம் தொடக்க வீரர் பிரியம் கார்க் உடன் இணைந்து அதிரடி பேட்டிங்கில் ஈடுபட்டார். 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (26) ரன்கள் எடுத்திருந்தபோது பிரியம் கார்க் ஆட்டமிழந்தார்.

கலக்கிய திரிபாதி:
அந்த நிலைமையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் உடன் மீண்டும் கைகோர்த்த ராகுல் திரிபாதி தனது அதிரடியான பேட்டிங்கை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி மும்பை பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். 3-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடியில் அரைசதம் கடந்து 9 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (44) ரன்கள் எடுத்த ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய மும்பை 2 பவுண்டரி 3 சிக்சருடன் 38 (22) ரன்கள் எடுத்த நிக்கோலஸ் பூரனை அவுட் செய்து கட்டுப்படுத்தியது. அதனால் 200 ரன்களை தொடமுடியாத ஹைதராபாத் 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Rohit Sharma Ishan Kishan

அதை தொடர்ந்து 194 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு மோசமான பார்மில் தவிக்கும் அதன் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் ஒரு வழியாக இந்த போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 11 ஓவர்கள் வரை ஹைதராபாத்துக்கு தொல்லை கொடுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளமிட்ட போது 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 (36) ரன்களில் ஆட்டமிழந்த கேப்டன் ரோகித் சர்மா முதல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அடுத்த ஓவரிலேயே 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (34) ரன்களில் இஷான் கிசான் அவுட்டாக அடுத்து வந்த திலக் வர்மாவும் 8 (9) ரன்களில் அவுட்டானதால் 123/3 என அந்த அணி பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

போராடிய டேவிட்:
அந்த நேரத்தில் டேனியல் சாம்ஸ் 15 (11) ரன்களிலும் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 2 (2) ரன்களில் ரன் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர். ஆனாலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய டிம் டேவிட் மும்பையின் வெற்றிக்காக போராடினார். குறிப்பாக கடைசி 3 ஓவரில் 45 ரன்கள் தேவைப்பட்ட போது 18-வது ஓவரை வீசிய தமிழகத்தின் நடராஜனை வெளுத்த அவர் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஒரே ஓவரில் 24 ரன்களை விளாசியதால் மும்பை வெற்றி என அனைவரும் நினைத்தனர். அப்போது கடைசி பந்தில் தேவையின்றி சிங்கிள் எடுக்க முயன்ற அவரை நடராஜன் ரன் அவுட் செய்ததால் போட்டி திடீரென ஹைதராபாத் பக்கம் மாறியது.

MI vs SRH Bhuvaneshwar Kumar TIm David

கடைசியில் நடராஜனை மிரட்டிய டிம் டேவிட் 46 (18) ரன்களில் அவரிடமே அவுட்டாகி சென்றபின் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது 19-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் 1 ரன் கூட கொடுக்காமல் அட்டகாசமாக பந்துவீசினார். இறுதியில் பரூக்கி வீசிய கடைசி ஓவரில் ரமன்தீப் சிங் 2 சிக்சர்களை பறக்க விட்டாலும் 20 மும்பை 190/7 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வி அடைந்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

வீழாத தமிழன்:
பொதுவாகவே கடைசி நேரத்தில் அற்புதமாக பந்துவீசி யார்கர் கிங் என பெயரெடுத்த தமிழக வீரர் நடராஜன் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பது போல் இப்போட்டியில் 4 ஓவர்களில் 60 ரன்களை கொடுத்து பந்துவீச்சில் தோற்றார். குறிப்பாக கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 26 ரன்களை டிம் டேவிட்டுக்கு வாரி வழங்கினாலும் கடைசிப் பந்தில் அவரை நடராஜன் ரன்-அவுட் செய்ததே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பைக்கு தோல்வியை பரிசளித்தது. மொத்தத்தில் பந்துவீச்சில் தோற்றாலும் இறுதியில் வீழாத தமிழனாக நடராஜன் ஹைதராபாத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

Natarajan Nattu SRH

இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் அதிர்ஷ்டத்தின் உதவியிருந்தால் கடைசி போட்டியில் வென்றால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் ரோகித் சர்மா இஷன் கிஷன் சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் போராடி தோற்ற மும்பை பங்கேற்ற 13 போட்டிகளில் 10-வது தோல்வியை பதிவு செய்து கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது.

Advertisement