கேரளாவை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார். 2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு அவரும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட், மேத்தியூ ஹைடன் ஆகியோரை அவர் கிளீன் போல்ட்டாக்கியதை மறக்க முடியாது.
குறிப்பாக ஹைடனை கிளீன் போல்ட்டாக்கிய பின் அவர் தரையில் 3 முறை தட்டி வெறித்தனமாக கொண்டாடியது 90ஸ் இந்திய ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். 2006 தென்னாப்பிரிக்காவின் வாண்ட்ரஸ் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா 123 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற முக்கிய பங்காற்றினார். மேலும் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் ஸ்ரீசாந்த் அங்கமாக இருந்தார்.
கிண்டலடித்த தோனி:
அந்த வகையில் தோனி தலைமையில் ஸ்ரீசாந்த் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றினார். இந்நிலையில் தம்முடைய ஆரம்பக் காலங்களில் தமக்கு நிறைய காதலிகள் இருந்ததாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். அதனால் ஒரு போட்டியின் போது ஒவ்வொரு மைதானத்திலும் உங்களுக்கு காதலி இருக்கிறாரா? என்று தோனி கிண்டலடித்ததாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் 2007 டி20 உலகக் கோப்பையில் ஹைடன் விக்கெட்டை எடுத்த போது வித்தியாசமாக கொண்டாடியது குறித்தும் அவர் பேசியுள்ளார். அதாவது மல்யுதத்தில் எதிராளியை தோற்கடிக்கும் முன் நடுவர் 3 முறை தரையை தட்டுவது போல் தான் செய்ததாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் ஸ்ரீசாந்த் பேசியது பின்வருமாறு.
ஹைடன் விக்கெட் பின்னணி:
“அந்த காலங்களில் நிறைய காதலிகள் இருந்தார்கள். அதனால் ஒவ்வொரு மைதானத்திலும் நான் ஒரு காதலியை பிடிக்கிறேன் என்று தோனி நினைத்தார். பொதுவாக நீங்கள் உங்களுடைய திறமையை அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் தோனியை போன்ற கேப்டன் மற்றும் நண்பர் என்னுடைய திறமை என்னை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை புரிய வைத்தவர்”
இதையும் படிங்க: விராட் கோலியின் மகத்தான சாதனையை 3 போட்டியில் முறியடித்த பேபி ஏ.பி.டி – விவரம் இதோ
“அந்த கொண்டாட்டத்தின் பின்னணி குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். மேத்தியூ ஹைடன் மிகப்பெரியவர். அவரை நான் கிளீன் போல்ட்டாக்கினேன். மல்யுத்தத்தில் நீங்கள் எதிராளியை வீழ்த்துவதற்கு முன்பாக நடுவர் 3 முறை தரையில் தட்டுவார். அதே போன்ற விஷயத்தை தான் நானும் அந்த விக்கெட்டை எடுத்த போது செய்தேன். அதுவே அந்த கொண்டாட்டத்தின் பின்னணியில் இருக்கும் அர்த்தமாகும்” என்று கூறினார்.



