
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அத்தொடரில் தெம்பா பவுமா தலைமையிலான டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சொந்த மண்ணில் சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடர்கள் காந்தி – மண்டேலா சுதந்திரக் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றிய மகாத்மா காந்தி அவர்கள் தேசத்தந்தையாக போற்றப்படுகிறார். அதே போல தென்னாபிரிக்காவின் சுதந்திரத்திற்கு போராடிய நெல்சன் மண்டேலா அவர்கள் அந்நாட்டின் தேசத்தந்தையாக போற்றப்படுகிறார்.
அத்துடன் மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராடுவதற்கு முன் தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக வேலை செய்தார். அமைதி, அகிம்சை வழியில் போராடி தேசப்பிதாவாக திகழும் அவர்களை போற்றும் வகையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்கள் காந்தி – மண்டேலா சுதந்திரக் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு கூடுதல் பெருமையை சேர்க்கும் வகையில் இம்முறை பிசிசிஐ புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது இம்முறை இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரில் டாஸ் வீசுவதற்கு பிரத்தியேக தங்க நாணயம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாணயத்தின் இருபுறத்திலும் மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். அதில் காந்தி உருவம் விழுந்தால் இந்தியா வென்றதாகவும், மண்டேலா உருவம் விழுந்தால் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றதாக கருத்தில் கொள்ளப்படும்.
இந்த அறிவிப்பை பெங்கால் வாரியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். பெங்கால் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்படும் அந்த நாணயம் இந்தியா – தென்னாப்பிரிக்க தொடர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டிக்கான முதல் 3 நாட்கள் விக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சச்சின், தோனி ஆகியோருக்கு கூட கிடைக்காத கௌரவத்தை.. 22 வயதிலேயே பெறும் ரிச்சா.. வெளியான அறிவிப்பு
முதல் போட்டிக்காக இதுவரை 1.40 கோடி டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 13ஆம் தேதி பெங்கால் வாரிய அலுவலகத்தில் இரு அணிகளிடமும் ஜட்மோகன் டால்மியா நினைவு உரையை சுனில் கவாஸ்கர் நிகழ்த்த உள்ளார். அந்த உரையில் ஐசிசி மற்றும் பிசிசிஐ’யை உலக கிரிக்கெட்டின் பவர் ஹவுஸாக மாற்ற டால்மியா அவர்கள் ஆற்றிய பங்கை கவாஸ்கர் எடுத்துரைக்க உள்ளார்.