இந்தியாவில் புகழ்பெற்ற துலீப் கோப்பை 2025 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் அரையிறுதி சுற்று செப்டம்பர் 4ஆம் தேதி பெங்களூருவில் துவங்கி நடைபெற்றது. அதில் முதல் அரையிறுதி போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலம் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வடக்கு மண்டலம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தெற்கு மண்டலத்துக்கு 103 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டன்மய் அகர்வால் 49 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன் அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் வந்த தேவ்தூத் படிக்கல் 128 பார்ட்னர்ஷிப் அமைத்து தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 57 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
ஜெகதீசன் அசத்தல்:
மிடில் ஆர்டரில் மோகித் காலே கேப்டன் முகமது அசாருதீன் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெகதீசன் சதத்தை அடித்து தென்னக அணியை வலுப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரிக்கி புய் நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்து 54 ரன்கள் குவித்தார்.
அடுத்து வந்த சல்மான் நிசர் 29 ரன்களில் அவுட்டான போதிலும் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ஜெகதீசன் இரட்டை சதத்தை நெருங்கினார். ஆனால் அப்போது 16 பவுண்டரி 2 சிக்சருடன் அவர் 197 (352) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இறுதியில் தியாகராஜன் 58, குர்ஜப்நீத் 29 ரன்கள் எடுத்த உதவியுடன் தெற்கு மண்டலம் 536 ரன்கள் குவித்தது.
வடக்கை சாய்த்த தெற்கு:
வடக்கு மண்டலத்துக்கு அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய வடக்கு மண்டல அணியை சிறப்பாக பவுலிங் செய்த தெற்கு 361 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சுபம் கஜ்ரியா சதத்தை 128, நிஷாந்த் சிந்து 82, ஆயுஷ் படோனி 40 ரன்கள் எடுத்தார்கள். தெற்கு மண்டலத்துக்கு அதிகபட்சமாக நிதிஷ் 3, குர்ஜப்நீத் சிங் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படிங்க: நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்ததில் மகிழ்ச்சி.. டி20 கம்பேக் குறித்து பேசிய – ஜஸ்ப்ரீத் பும்ரா மகிழ்ச்சி
அடுத்ததாக 175 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கிய தெற்கு மண்டலம் 95/1 ரன்களை எடுத்த போது போட்டி டிராவில் முடிந்தது. டன்மய் அகர்வால் 13 ரன்களில் அவுட்டான போதிலும் ஜெகதீசன் 52*, படிக்கல் 16* ரன்கள் எடுத்தனர். ஆட்டநாயகனாக ஜெகதீசன் (197, 52*) அறிவிக்கப்பட்டார். இப்போட்டியில் பிசிசிஐ விதிமுறைப்படி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் வடக்கு மண்டலத்தை தோற்கடித்த தெற்கு மண்டலம் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான மத்திய மண்டலத்தை தெற்கு மண்டலம் எதிர்கொள்கிறது.



