வாழ்த்திய கங்குலி, அந்த 2 விஷயத்தையும் உடனடியாக மாற்றுவேன் – புதிய தலைவர் ரோஜர் பின்னி உறுதி

Roger Binny Sourav Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்து வந்த முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் சவுரவ் கங்குலி அந்த பதவியிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் சூதாட்ட புகாரில் சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தன்னுடைய அதிரடி கேப்டன்ஷிப் வாயிலாக இந்தியாவை வெற்றி நடை போட வைத்த அவர் கடந்த 2019இல் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற போது இந்திய வாரியத்தையும் சிறப்பாக நடத்துவார் என்று ரசிகர்கள் மகிழ்ந்தனர். அதற்கேற்றார் போல் பொறுப்பேற்றதுமே உள்ளூர் வீரர்களின் சம்பளத்தை உயர்த்திய அவர் அதுவரை யோசித்துக்கொண்டிருந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா விளையாடுவதற்கான வரலாற்று முடிவையும் எடுத்தார்.

Ganguly

- Advertisement -

அந்த வகையில் வெற்றிகரமாக செயல்பட்ட அவர் உலகக் கோப்பையை வென்று தரவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க டி20 கேப்டன் பதவியிலிருந்து மட்டும் விலகிய விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்ததில் சர்ச்சைக்குள்ளானார். அதேபோல் அணி தேர்வில் தலையிடுவதாக அவர் மீது விமர்சனங்கள் இருந்தன. இருப்பினும் மொகாலியில் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நேரில் சென்று விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்த போது தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வந்தார்.

வாழ்த்திய கங்குலி:
அப்படி ஒருசில சர்ச்சைகள் இருந்தாலும் அவரது காலத்தில் 48,930 கோடிக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ஏலம் போனது, 2021இல் 36க்கு ஆல் அவுட்டான பின்பும் ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது, 2022 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை வென்றது, சமீபத்தில் இங்கிலாந்தில் மகளிரணி காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது போன்ற நிறைய உச்சத்தை இந்திய கிரிக்கெட் எட்டியது.

Ganguly

அந்த வகையில் வெற்றிகரமாக செயல்பட்ட அவரது பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்ததை அடுத்து அக்டோபர் 18ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐயின் 91வது வருடாந்திர கூட்டத்தில் சௌரவ் கங்குலி முறைப்படி தலைவர் பதவியிலிருந்து வெளியேறினார். அவருக்கு பதில் 1983 உலககோப்பை வென்ற இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐயின் 36வது தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை வாழ்த்தி கங்குலி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஜாருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதை இந்த புதிய குழு முன்னோக்கி எடுத்துச்செல்லும். அதனால் பிசிசிஐ சிறந்த கைகளில் உள்ளது. இந்திய கிரிக்கெட் எப்போதுமே வலுவானது என்பதால் அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கொல்கத்தா வாரியத்தின் தலைவராக 5 வருடங்கள் இருந்த நான் பிசிசிஐ தலைவராகவும் இருந்தாலும் தற்போது வெளியேறும் நேரம் வந்துள்ளது. ஒரு நிர்வாகியாக உங்களது குழுவுக்கு நீங்கள் எப்போதும் சிறந்தவற்றை பங்காற்ற வேண்டும்”

Roger Binny

“ஒரு கிரிக்கெட் வீரராக ஏற்கனவே நான் நிறைய வருடங்கள் விளையாடி புரிந்துள்ளேன். ஒரு நிர்வாகியாக என்னுடைய பணியை மகிழ்ச்சியுடன் செய்த நான் ஒரு வீரராகவும் நிர்வாகியாகவும் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கவே முடியாது” என்று கூறினார். அதை தொடர்ந்து ஏற்கனவே கர்நாடக கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த அனுபவத்தை பெற்றுள்ள ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற இந்த சமயத்தில் இந்தியாவில் இருக்கும் பிட்ச்களை வெளிநாடுகளில் இருக்கும் பிட்ச்களுக்கு நிகராக தரம் உயர்த்தப் போவதாக கூறினார்.

அத்துடன் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து முக்கிய தொடர்களில் வெளியேறுவதற்கான காரணங்களை கண்டறிந்து முடிந்தளவு தடுத்து நிறுத்த முயற்சிக்க உள்ளதாக கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிசிசிஐ தலைவராக எனக்கு தற்போது 2 வேலைகள் உள்ளது. முதலில் முக்கிய வீரர்கள் காயமடைவதை தடுப்பது. ஏனெனில் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயமடைந்து உலக கோப்பையிலிருந்து வெளியேறியதால் நம்முடைய மொத்த திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. 2வது இந்தியாவில் இருக்கும் பிட்ச்கள். இங்குள்ள பிட்சுகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வெளிநாடுகளில் இந்தியா விளையாடும் போது நமது அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

Advertisement