ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அந்த தொடரில் 4 போட்டிகளை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.
அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தம்முடைய சொந்தக் காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியிருந்தார். முன்னதாக ரோகித் சர்மாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாலேயே முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வலம் வந்தன.
ரோஹித் விளையாடுவாரா:
இருப்பினும் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே ரோஹித் சர்மா எதிர்பார்த்த வேலை முடிந்து விட்டதால் நாட்டுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தனர். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.
“ரோஹித் சர்மா விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணிக்கு அவருடைய கேப்டன்ஷிப் தேவைப்படுகிறது. அவருடைய மனைவி நேற்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்று நம்புகிறேன். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று உறுதியாக நம்புகிறேன். முடிந்தளவுக்கு அவர் வேகமாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டும்”
கங்குலி அட்வைஸ்:
“ஒருவேளை நான் அவருடைய இடத்தில் இருந்தால் பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடுவேன். அந்த போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. இந்த தொடருக்குப் பின் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடப் போவதில்லை. எனவே சிறந்த கேப்டனான ரோகித் சர்மா தலைமை தாங்குவது இந்தியாவுக்கு அவசியமாகிறது”
இதையும் படிங்க: முன்பு இருந்த விராட் கோலி வேற.. இப்போ இருக்கும் விராட் கோலி வேற – உஸ்மான் கவாஜா கருத்து
“ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட ரோகித் சர்மா விரும்பவில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய கேரியரை டெஸ்ட் கேப்டனாக அல்லாமல் முடிக்க கூடாது என்று அவரிடம் பிசிசிஐ தலைவராக இருந்தபோது நான் சொன்னேன். எனவே அவருடைய தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்துள்ள விஷயங்களை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை” என்று கூறினார்.



