
இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடைசியாக தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி பல்வேறு ஐசிசி தொடர்களில் அரையிறுதி போட்டியை வரை சென்றிருந்தாலும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இம்முறை முழுக்க முழுக்க 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்திய மைதானங்களில் நடைபெற இருப்பதனால் இந்திய அணி இந்த தொடரில் வெற்றி பெற அதிக முனைப்பு காட்டும். இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெற உள்ள வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன. இந்நிலையில் இன்று இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த அணியில் விளையாடும் வீரர்களே பெரும்பாலும் உலக கோப்பை தொடரிலும் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்க போவது யார்? வெற்றி பெறப்போவது யார்? என பல்வேறு கேள்விகளுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் பதிலளித்து வருகின்றார்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் : இந்திய அணி ஒரு அணியின் மீது மட்டும் கவனம் செலுத்தும் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டத்தையுமே அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் அஸ்வின், சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் சேர்க்கப்படாதது ஏன்? அஜித் அகர்கர் கொடுத்த பதில் இதோ
இறுதி போட்டி வரை இந்திய அணியால் முன்னேற முடியும். இந்திய அணியிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். இந்த உலகக் கோப்பையை யார் வெல்லப்போவது யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்தியா வெல்லும் வாய்ப்பு எப்போதுமே உள்ளது என சிரித்துக் கொண்டே கங்குலி கூறி அங்கிருந்து நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.