கிரிக்கெட் பிரபலங்களை பற்றி எடுக்கப்படும் சுயசரித்திர படங்கள் என்றுமே வெற்றியடைய தவறியது இல்லை. கடந்த ஆண்டு வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படமான “தோனி ” படமாக இருக்கட்டும், அதன் பின்னர் வந்த சச்சினின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கட்டும். இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்கை வரலாறும் படமாக வெளியாக போகிறது. பிரபல இந்தி பட தயரிப்பாளரான ஏக்தா கபூர் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பது குறித்து கங்குலியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். இந்திய கிரிக்கெட் அணியின் தாதா என்று அழைக்கப்படும் கங்குலி இந்திய அணிக்காக 1992- 2008 ஆம் ஆண்டு வரை பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த கங்குலி பல முக்கியமான தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். தற்போது இந்த படம் கங்குலி ஏற்கனவே வெளியிட்ட தனது சுய சரிதை புத்தகமான “the century is not enough ” என்ற புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் நூறு சதவீதம் ஊர்ஜிதமாகவில்லை.
இதுபற்றி கங்குலி தெரிவிக்கையில் “இந்த படம் எடுப்பது குறித்து ஏக்தா கபூர் தயாரிப்பு நிறுவனத்திடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், இன்னும் இதுகுறித்து முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. அது முடிவானதும் மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.