சோதனை காலத்திலும் விராட் கோலிக்கு அட்வைஸ் கொடுக்காதது ஏன் – சௌரவ் கங்குலி அளித்த வித்யாச பதில் இதோ

Ganguly 1
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜாம்பவான் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் ஏராளமான ரன்களையும் சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக உருவெடுத்தார். அதிலும் 31 வயதிலேயே 70 சதங்களை அசால்டாக அடித்த அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எளிதாக முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகலானால் இரவு வரும் என்ற இயற்கையின் நியதிக்கு ஏற்ப உச்சத்தை மட்டுமே நோக்கி சென்று கொண்டிருந்த அவர் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த போதிலும் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து முடிந்தளவு வெற்றிகளில் பங்காற்றினார்.

Virat Kohli 122

- Advertisement -

இருப்பினும் களமிறங்கினாலே சதமடிப்பார் என அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கியுள்ள அவர் 71வது சதமடிப்பதற்கு 2 வருடங்கள் தாண்டியதால் பொறுமையிழந்த சில முன்னாள் வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் அவை அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு கடுமையான பயிற்சிகளுடன் விடாமுயற்சி செய்த அவர் 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு வழியாக 1020 நாட்கள் கழித்து சதமடித்தார்.

கங்குலியின் ஆதரவு:
அதனால் விமர்சனங்களை தூள் தூளாக்கிய அவரை அதே முன்னாள் வீரர்கள் கைதட்டி பாராட்டும் நிலைமைக்கு வந்துள்ளார்கள். முன்னதாக விராட் கோலியை முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்தாலும் அவரது அருமையை உணர்ந்து ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்தனர். அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விராட் கோலி பார்முக்கு திரும்பிவிடுவார் என்று நம்புவதாக விமர்சிக்காமல் தொடர்ந்து 2 – 3 முறை சொல்லி ஆதரவு கொடுத்து வந்தார்.

ganguly

ஆனால் நிறைய தருணங்களில் ஆதரவு கொடுத்த அவர் இதர சில முன்னாள் வீரர்களை போல் எப்படி பார்முக்கு திரும்ப வேண்டும் என்று ஆலோசனைகளை எப்போதுமே கொடுக்கவில்லை. இருப்பினும் சௌரவ் கங்குலி போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவர் எப்படி பார்முக்கு திரும்ப வேண்டும் என்று சொல்வதற்கு தகுதியுடையவர் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் விராட் கோலியை போன்றவருக்கு எப்படி பார்முக்கு திரும்ப வேண்டும் என சொல்லி தெரிய வேண்டியதில்லை என்பதால் அட்வைஸ் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கும் சவுரவ் கங்குலி தன்னுடைய காலத்தில் இதுபோன்ற மோசமான நேரங்களில் விமர்சனங்களைத் தவிர்க்க செய்தித்தாள்கள் வாசிப்பதை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய யூடியூப் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களில் நான் அவரை (விராட் கோலி) பெரும்பாலும் சந்திப்பதில்லை. பிசிசிஐ தலைவராக இருப்பதால் வேலைகளுக்காக எப்போதும் பயணித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை எனக்கு உள்ளது. மறுபுறம் அவர் களத்தில் விளையாடும் வேலையில் உள்ளார். எனவே நான் அவரை அதிகம் பார்ப்பதில்லை. ஊடகங்களில் வரும் அத்தனை பெயர்களும் ஒரு கட்டத்திற்குப் பின் நீடித்திருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அந்த பெயர்கள் மாறிக் கொண்டே இருக்கும். மேலும் ஊடகங்களில் வரும் விமர்சனங்களில் பாதி எனக்கு தெரியாது. ஏனெனில் நான் பெரும்பாலும் அதை படிக்காமல் தவிர்த்து விடுவேன்”

Ganguly

“அதிலும் என்னுடைய காலத்தில் ஹோட்டலில் தங்கியிருக்கும் போது “பாஸ், என்னுடைய அறைக்கு செய்தித்தாள்களை மட்டும் அனுப்பி விடாதீர்கள்” என்று நிர்வாகியிடம் கூறி விடுவேன். ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள், மொபைல் போன்கள் வாயிலாக அனைத்தும் தாமகவே தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. என்னைக் கேட்டால் கிரிக்கெட் வீரர்கள் இது போன்றவற்றை நிறுத்தி வைப்பதற்கான வழியை கண்டு பிடித்தால் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

கடந்த 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி உலக கோப்பையை வெல்லவில்லை என்பதற்காக 2021 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியையும் பிசிசிஐ அதிரடியாக பறித்தது. அதற்கு காரணம் சௌரவ் கங்குலி தான் என்று செய்திகளும் சில ஆதாரங்களும் வெளிவந்த நிலைமையில் சதமடிக்கவில்லை என்பதற்காக எப்போதுமே அவர் விராட் கோலியை விமர்சிக்காமல் ஆதரவு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement