இப்படி செயல்பட்டால் உ.கோ வெல்ல முடியாது – இந்திய அணியின் தோல்வி பற்றி எச்சரிக்கையுடன் கங்குலி பேசியது என்ன

Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக் பொறுப்பேற்றார். அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களது தலைமையில் சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்ட இந்தியா தோல்வியே சந்திக்காமல் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக தரவரிசையில் முன்னேறியது.

Mathew Wade

- Advertisement -

அதனால் உலகக்கோப்பை நமதே என மேலும் மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் வென்றாலும் வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. அதனால் இங்கேயே கோப்பையை வெல்ல முடியாத இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே உலக கோப்பையை வெல்லப்போகிறது என கலக்கமடைந்த ரசிகர்களின் கவலை சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்ததால் மேலும் அதிகரித்துள்ளது.

சொதப்பும் இந்தியா:
தவறான அணி தேர்வு, தேர்வு செய்த வீரர்களையும் சரியாகப் பயன்படுத்தாத அணி நிர்வாகத்தின் மெத்தனம், சுமாரான கேப்டன்ஷிப், சோதனை முயற்சி என்ற பெயரில் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு தொடரிலும் நிகழ்த்தப்படும் தேவையற்ற மாற்றங்கள், உமேஷ் யாதவ் போன்ற சம்பந்தமற்ற வீரர்களை பயன்படுத்துவது என கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கேள்வி கேட்க யாருமில்லை என்பது போல் நடந்து கொள்ளும் முறை இந்தத் தோல்விகளுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

Rohit Sharma IND

அதுபோக உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரைத் தவிர கேப்டன் ரோகித் சர்மா உட்பட முக்கிய வீரர்கள் முக்கிய போட்டிகளில் சொதப்புவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக கோப்பையை வெல்ல ஒரு சில வீரர்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது என்பதை நினைவில் வைத்து இந்திய அணியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்று முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி காட்டத்துடன் பேசியுள்ளார்.

- Advertisement -

ஆசிய கோப்பை உட்பட சமீபத்திய தோல்விகளைப் பற்றி இன்று அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் இந்தியா கடந்த உலக கோப்பை மற்றும் இந்த வருட ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்று நீங்கள் சொல்லலாம். அதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரிடம் பெரிய தொடர்களில் சுமாராக செயல்படுவது ஏன் என்பதை பற்றி சமீபத்தில் விவாதித்தோம். எனவே இம்முறை அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்”

Ganguly

“அணியின் தற்போதைய நிலைமை பற்றி ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் ஆகியோர் அக்கறை கொள்வார்கள் என்று நம்புகிறேன். நாக்பூரில் நடைபெறும் 2வது போட்டியின் போது மைதானத்தில் நான் இருப்பேன். அப்போட்டியில் இந்தியா வெல்லும் என்று நம்புகிறேன். மேலும் உலகக் கோப்பைக்காக இரண்டரை மாதங்கள் முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் இந்தியா பெர்த் நகரில் சில பயிற்சி போட்டிகளில் விளையாடி பயிற்சி எடுக்க உள்ளது”

“இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். கோலி, ரோகித், ராகுல், பாண்டியா, சூர்யகுமார் மற்றும் பந்துவீச்சு துறை என அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் ஒரு சில வீரர்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் உலக கோப்பையை உங்களால் வெல்ல முடியாது. அதற்கு ஒவ்வொரு வீரரும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமாகும்”

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

“சமீபத்தில் இந்தியா சில போட்டிகளில் தோற்றிருக்கலாம். ஆனால் ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதம் கிட்டத்தட்ட 82% ஆகும். கேப்டனாக அவர் குறைவான போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளார்” என்று கூறினார். அதாவது சமீபத்திய தோல்விகள் பற்றி கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் விவாதித்ததாக தெரிவிக்கும் சௌரவ் கங்குலி இந்த உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக செயல்படும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

Advertisement