இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் கடைசி முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் 36 வயதை கடந்து விட்ட அவர்கள் இன்னும் சில வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரின் போது ஓய்வு பெற்றிருக்கலாம்.
எனவே இந்த கடைசி தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஏனெனில் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சுமாராக விளையாடிய அவர்கள் இந்தியாவின் வரலாற்றுத் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள். அதனால் தங்களுடைய தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளார்கள்.
அடுத்த சீனியர்கள்:
இந்நிலையில் ரிஷப் பண்ட் – சுப்மன் கில் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெறும் போது இந்தியாவின் சீனியர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வால் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணி வருங்காலத்தை நோக்கிய மாற்றங்களில் இருக்கிறதா என்பதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை”
“ஏனென்றால் இந்திய அணியின் வட்டாரத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அடுத்த தலைமுறையை பற்றி நீங்கள் பேசும் போது ரிஷப் பண்ட் ஏற்கனவே வெளிநாடுகளில் சமீபத்திய வருடங்களில் தன்னை சிறந்த வீரராக தன்னை நிரூபித்துள்ளார். அவரைச் சுற்றி நம்முடைய அணி உருவாகும் என்று நான் நம்புகிறேன்”
கங்குலி கணிப்பு:
“இந்த ஆஸ்திரேலியா தொடர் முடியும் போதே சுப்மன் கில் – ரிஷப் பண்ட் அடுத்த லெவல் சீனியர் பேட்ஸ்மேன்களாக உருவெடுப்பார்கள் என்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது. நம்முடைய பேட்டிங் வரிசை நன்கு அமைந்துள்ளதாகவே நான் பார்க்கிறேன். நம்முடைய பேட்டிங் வரிசையில் எந்த செட்டிலாகாத மாற்றமும் ஏற்படவில்லை. நம்மிடம் விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் உள்ளனர். அவர்களுடன் ரோகித் சர்மா விரைவில் இந்திய அணியுடன் இணைய உள்ளார்”
இதையும் படிங்க: நானாக இருந்தாலும் இதைத்தான் பண்ணியிருப்பேன்.. ரோஹித் பண்ணது தப்பே இல்ல – மைக்கல் கிளார்க் ஆதரவு
“இந்த வீரர்களில் நிறைய பேர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியுள்ளார்கள். முதல் முறையாக விளையாட உள்ள சுப்மன் கில் இந்திய அணிக்கு நல்ல பலமாக இருப்பார்” என்று கூறினார். இதை அடுத்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



