இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடித்து 269 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் தோற்றது. அந்த நிலையில் ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் இரட்டை சதத்தை அடித்து இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக விளையாடினார். அவருடன் வாஷிங்டன் சுந்தர் 42, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பசீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
சகாப்தத்தின் சிறந்த இன்னிங்ஸ்:
அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் அனைத்து காலங்களில் விளையாடிய இந்திய வீரர்களில் சுப்மன் கில் மிகவும் சிறந்த இரட்டை சதத்தை அடித்துள்ளதாக ஜாம்பவான் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார். மேலும் சுப்மன் கில் 2 மாதங்களில் பேட்டிங்கில் அற்புதமான முன்னேற்றத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
4வது இடத்தில் களமிறங்கி முதல் போட்டியில் சதம், 2வது போட்டியில் இரட்டை சதத்தை அடித்ததை வைத்து பார்க்கையில் இனிமேல் அவருக்கு ஓப்பனிங் செட்டாகாது போல என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சுப்மன் கில்லிடம் இருந்து முற்றிலும் ஒரு மாஸ்டர் கிளாஸ். அதில் எந்த குறைபாடுகளும் இல்லை”
கங்குலி, சேவாக் பாராட்டு:
“அது இங்கிலாந்தில் அனைத்து சகாப்தத்திலும் விளையாடப்பட்ட இன்னிங்ஸ்களில் நான் பார்த்த மிகவும் சிறந்த இன்னிங்ஸ். கடந்த சில மாதங்களில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் இடம் அவருடையது கிடையாது என்பது போல தெரிகிறது. இது இந்தியா வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் போட்டி” என்று பதிவிட்டுள்ளார். அதே போல ஜாம்பவான் விரேந்தர் சேவாக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.
இதையும் படிங்க: சச்சின், விராட் கோலியால் முடியாததை செய்துள்ள கில் தான் இந்தியாவின் புதிய நம்பர் 4.. மைக்கேல் ஆதர்டன்
“சுப்மன் கில்லிடம் இருந்து அபாரமான இரட்டை சதம். அது சிறப்பான முதிர்ச்சி பொறுமை மற்றும் திறன் ஆகியவற்றால் வந்துள்ளது” என்று பாராட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியது. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.



